பதிவு செய்த நாள்
31
ஜன
2022
06:01
காஞ்சிபுரம் : பென்னலுார் சீனிவாசப்பெருமாள் கோவிலில், 80 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டு, தற்போது பொலிவிழந்த நிலையில் காணப்பட்ட தஞ்சாவூர் ஓவியம், பழமை மாறாமல், பாரம்பரிய முறைப்படி மூலிகை வண்ணங்களால் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. உத்திரமேரூர் அடுத்த பென்னலுாரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், 80 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட, பாமா, ருக்மணி சமேத கண்ணபிரானின், தஞ்சாவூர் ஓவியம் உள்ளது.
தங்க முலாம்: பக்தர்கள் வழிபட்டு வந்த இந்த பழமையான ஓவியம் நாளடைவில், நிறம் மங்கி, பொலிவிழந்து சிதிலமடையும் நிலையில் இருந்தது. தஞ்சாவூர் ஓவியத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரமணா கலைக்கூடத்தினரிடம் ஓவியத்தை புதுப்பிக்கும் பணியை ஒப்படைத்தனர்.தொடர்ந்து, கலைக்கூடத்தினர் தஞ்சாவூர் ஓவியத்தை பழமை மாறாமல் புதுப்பித்துள்னர். ரமணா கலைக்கூட நிர்வாகிகளான, வரைகலை வல்லுனர்கள் தினேஷ்பாபு, டில்லிபாபு கூறியதாவது: தஞ்சாவூர் ஓவியம், 3 அடி உயரமும், 2.5 அடி அகலமும் உடையது. ஓவியத்தை புதுப்பிக்க, எந்தவிதமான, ரசாயன வண்ணத்தை பயன்படுத்தாமல், பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட மூலிகை வண்ணங்கள் மற்றும் அசல் தங்க முலாம் பூசப்பட்ட காகிதங்களால், ஆறு நாட்களாக இருவரும் பணிபுரிந்து, பழமை மாறாமல் ஓவியத்தை புதுப்பித்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மூலிகை வண்ணம் தயாரிப்பது எப்படி: பச்சை கற்பூர தைலம், கரித்துகள், ஆலிவ் விதை எண்ணெய், சுக்கான் கள், முட்டை வெள்ளை கரு, அரேபியன் பிசினி, மஞ்சகாவி, பச்சை காவி, புளியங்கொட்டை, விராலி மஞ்சள் விழுது, செந்துாரக்கல், கிளிஞ்சல் சுண்ணாம்பு, தேன், கரும்புச்சாறு, கணவாய் மீன் வெளிப்படுத்தும் கருமையான நீர்பசை, நெய், கடுக்காய் மற்றும் சில மஞ்சள் மலர்கள், கத்திரி பூ, பூண்டு மற்றும் பச்சை இலைகளை அரைத்து மூலிகை வண்ணம் தயாரிக்கப்படுகிறது.