திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், சுவாமிக்கு அணிவிக்கப்படும் மாலைகளில் உள்ள மலர்கள் வீணாவதை கண்ட கோவில் நிர்வாகம் அந்த மலர்களைக் கொண்டு ஊதுபத்தி உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் தயாரித்து விற்க முன்வந்துள்ளனர்.
‛நமாமி கோவிந்தா’ என்ற பிராண்டில் வெளிவரும் இந்த நறுமணப் பொருட்களுடன் கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பஞ்ச காவ்யா என்ற மக்களின் ஆரோக்கியத்திற்கு வித்திடும் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.இதற்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆஷிர்வாத், ஆயுர்வேத மருந்தகத்தின் தொழில்நுட்ப ஆதரவு உள்ளது. மிகக்குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் இதன் விலையும் தரமும் இருக்கும் என்பதை அறிவித்த திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தேர்ந்து எடுக்கப்பட்ட பதினைந்து உயர் மருத்துவமனைகளில் தேவஸ்தான ஊழியர்கள் காசில்லாமல் மருத்துவம் பார்த்துக்கொள்ளும் சுகாதார அட்டை வசதியையும் வழங்கினார். மேலும் மாநில அரசுடன் இணைந்து இயற்கை விவசாயம், மாட்டு சிறுநீரில் இருந்து கரிம உரங்கள் தயாரித்தல்,தெலுங்கு மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீனமயமாக்கப்பட்ட கோசாலைகளை உருவாக்குதல், பஞ்சகவ்யா பொருட்கள் தயாரிப்பில் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய திட்டங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.