திருப்பதி ஏழுமலையான் கண் விழிப்பதற்காக அதிகாலையில் பாடப்படுவது வெங்கடேச சுப்ரபாதம். அதில் இடம் பெற்றுள்ள வெங்கடேச பிரபத்தி ஸ்தோத்திரத்தில் ‘ஸ்ரீ வெங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே’ என்றே முடியும். இதன் பொருள், ‘வெங்கடேச பெருமாளே! உன் திருவடியை சரணடைந்து விட்டேன்’ என்பதாகும். பெருமாளிடம் சரணடைவதை வலியுறுத்தும் விதத்தில், சுப்ரபாதத்தின் 18வது ஸ்லோகம்,‘‘சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் உன் திருவடி தாமரைக்கு தொண்டு செய்ய காத்திருக்கின்றனர். வெங்கடேசப் பெருமாளே! சீக்கிரம் எழுந்தருள்வாயாக’’ என குறிப்பிடுகிறது. நவக்கிரகங்களை ஏவல் செய்யும் அதிகாரம் பெற்ற பெருமாளின் திருவடியை பிடித்துக் கொண்டால் நாம் பயப்படத் தேவையில்லை.