கோயில் பணியாளர்கள் அடுத்தடுத்து இடமாற்றம்: அறங்காவலர் அதிகாரங்கள் பறிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2022 03:02
மதுரை: தமிழக அறநிலையத்துறையின்கீழ் உள்ள கோயில் ஊழியர்கள் பலர் அடுத்தடுத்து வெவ்வேறு கோயில்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கான அதிகாரம் அறங்காவலருக்கு மட்டுமே உள்ள நிலையில், விதிமீறி அதிகாரிகள் இடமாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இத்துறையின்கீழ் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன. ஊழியர்களுக்கு கோயில் நிர்வாகத்தில் இருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. ஊழியர் தவறு செய்தாலோ, விருப்பத்தின் பேரிலோ வேறு கோயில்களுக்கு இடமாற்றும் அதிகாரம் அறங்காவலருக்கு மட்டுமே உள்ளது. இதை அறநிலையத்துறை சட்டப்பிரிவு 55ம் உறுதி செய்கிறது. ஆனால் சட்டதிருத்தம் செய்யாமல் 2020ல் விதிகளில் மட்டும் திருத்தம் செய்த அதிகாரிகள், பணி இடமாற்றம் செய்யும் அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர். இதை தொடர்ந்து பிடிக்காதவர்கள், சங்க நிர்வாகிகள் என ஊழியர்கள் பலர் வெவ்வேறு கோயில்களுக்கு இடமாற்றப்பட்டனர்.அந்த கோயில்களில் வருமானம் குறைவாக உள்ளதால் மாதசம்பளம் பெறுவதே பெரும்பாடாக உள்ளது. சில ஊழியர்கள் தொடர்ந்து அல்லப்படுகின்றனர். வேறு கோயில்களுக்கு பணியிட மாற்றம் செய்யும்போது, அங்குள்ளவர்களின் கீழ் பணிபுரிய வேண்டும் என்பதால் சீனியாரிட்டி பாதிக்கிறது.கோயில்களில் அறங்காவலர் பதவி காலியாக உள்ள நிலையில், அதிகாரிகள் எடுத்தோம்; கவிழ்த்தோம் என செயல்படுவது கோயில் நிர்வாகங்களுக்கு கெட்ட பெயரே ஏற்படுத்தும். எனவே அறங்காவலருக்குரிய அதிகாரத்தை பறிக்கும் வகையில் விதிகளை திருத்தியதை ரத்து செய்ய வேண்டும். அறங்காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.