சென்னை: கோவில் யானைகளை முறையாக பராமரிக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து அறநிலையத் துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களில், 31 யானைகள் உள்ளன. இவை முழுமையாக பாராமரிக்கப்பட்டு வருகின்றன. யானைகளின் வயது, எடை, உடல் தகுதியை பொறுத்து தினமும் இருவேளை, 10 கி.மீ.,க்கு குறையாமல் நடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
யானைகளின் ஆரோக்கியத்திற்கு, டெக்காமல்லி எண்ணெய் தயாரித்து தடவப்படுகிறது. குளியலுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன; தேவையான உணவும் வழங்கப்படுகிறது.பானை பாகன்களால், யானைகள் அன்புடன் நடத்தப்பட வேண்டும்; கடுமை காட்டுவது கூடாது. யானைகளிடம் குறும்பு செயல்களை செய்யக் கூடாது. இதை சார்நிலை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். கோவில்களில் நடைபெறும் பூஜை மற்றும் திருவிழாக்கள் தவிர, பிற எவ்வித காரியங்களுக்கும் யானைகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. யானைகளை புகைப்படம் எடுப்பது, அவற்று டன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.