திருவண்வண்டூர் என்பது நம்மாழ்வாரால் பாடல் பெற்ற தலம். இது கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் செங்கனுார் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள திருமால் கமலநாதன், பாம்பணையப்பன் என அழைக்கப்படுகிறார். தாயாரின் பெயர் கமலவல்லி நாச்சியார். இந்த கோயிலுக்கும் பாண்டவர்களில் ஒருவனான நகுலனும் நிறைய தொடர்புண்டு. மகாபாரதப் போருக்குப் பிறகு அபிமன்யுவின் மகன் பரீட்சித்து பட்டம் கட்டிய பிறகு பாண்டவர்கள் ஒரு புனிதப் பயணத்தை மேற்கொண்டனர். அப்படி அவர்கள் வந்து சேர்ந்தது பம்பை நதிக்கரைக்கு. பஞ்சபாண்டவர்கள் கேரளத்துக்கு வந்தபோது இந்த கோயிலை புதுப்பித்துச் செயல்படுத்தியது நகுலன். எனவே நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் இது என்பது குறிப்பிடப்படுகிறது. இங்கு திருமால் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் கருவறை வட்ட வடிவ அமைப்பில் உள்ளது. இரண்டு அடுக்குகளாக உள்ள கோபுரம். கோயிலைச் சுற்றி நீள்சதுர வடிவில் சுவர். கருவறையைச் சுற்றி ஒரு நீள் சதுர அரங்கம் உள்ளது. நிறையத் துாண்கள் இதில் உள்ளன. இந்தப் பகுதியை நாலம்பலம் என்கிறார்கள். கருவறைக்குள் நுழையும் பகுதியில் ஒரு மேடை உள்ளது. இதை நமஸ்கார மண்டபம் என்கிறார்கள். இல்ல முக்கிய பூசாரியை தந்திரி என்கிறார்கள். அதற்கு அடுத்த நிலையில் உள்ள பூசாரியை மேல்சாந்தி என்கிறார்கள். இந்த இருவர் மட்டுமேதான் கருவறைக்குள் நுழைய முடியும். நம்மாழ்வாரின் நினைவாக ஆண்டுதோறும் திருவிழா எடுக்கப்படுகிறது. ஒடிசாவில் உள்ள பூரியில் பாண்டவர்கள் ஆளுக்கொரு கோயில் எழுப்பியுள்ளனர். ஐந்தும் சிவன் கோயில்கள். இவற்றில் கபால மோட்சனா என்ற கோயிலை எழுப்பியது நகுலன். இங்குள்ள சிவனை ‘கபால மோட்சண மகாதேவர்’ என்கிறார்கள். குறுகலான வழியில் உள்ள படிகளில் ஏறி இந்த கோயிலை அடையலாம். பூரி நகரை எல்லா திசைகளில் இருந்தும் காக்கும் அஷ்ட சம்பு கோயில்களில் இதுவும் ஒன்று. பூரி ஜகன்னாதர் கோயிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது.