பதிவு செய்த நாள்
14
பிப்
2022
10:02
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசிமகம் தேர்த்திருவிழா உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்க வெங்கடேச பெருமாள் அனுமந்த வாகனத்தில் திருவீதி வந்து அருள்பாலித்தார்.
காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, தேர் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. கோவை மாவட்டம், காரமடையில் வைணவ ஸ்தலங்களில் சிறந்து விளங்குவது, அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், மாசிமகத் தேர் திருவிழா, வெகு விமர்சையாக நடைபெறும். விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரோட்டத்தை கண்டு ரசிப்பர்.
இந்த ஆண்டு மாசி மகத் தேர் திருவிழா, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்ன வாகனம், சிம்மம், அனுமந்த வாகனத்தில், அரங்கநாத பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று இரவு கருட சேவை நடைபெறுகிறது. 15ம் தேதி காலை, பெட்டத்தம்மன் அழைப்பும், 16ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், இரவு யானை வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. 17ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்று மாலை தண்ணீர் சேவையும், 18ல் பந்த சேவையும், இரவு குதிரை வாகனத்தில் பரிவேட்டை நிகழ்ச்சியும், 19ல் சேஷ வாகனத்தில் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர் திருவிழாவை முன்னிட்டு, தேர் அலங்காரம் செய்யும் பணிகளில், பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தேரை அழகு படுத்தும் பணிகளில், ஈடுபடும் பழனியப்பன் கூறியதாவது: தேரை சுற்றி அலங்காரம் கட்டப்படும் கொடுங்கையும், மகுடமும் அழகுபடுத்தும் பணிகளில், 8 பேர் வேலை செய்கின்றனர். மூங்கிலால் செய்த கொடுங்கை என்ற தடுப்புக்கு, சிகப்பு துணியால் கட்டிய பின்பு, அதில் அலங்கார பேப்பர் ஒட்டும் பணிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில், 30க்கும் மேற்பட்ட கோவில்களில், பல ஆண்டுகளாக தேர்களுக்கு அலங்காரம் செய்து வருகிறோம். எங்கள் குடும்ப நபர்கள் பக்தியோடு, விரதம் இருந்து, தேர் அலங்காரம் செய்யும் பணிகளில், ஈடுபட்டு வருகிறோம். தாத்தா, அப்பா, வழியில், தற்போது நானும், எனது மகனும் தேர் அலங்கார பணிகளில், ஈடுபட்டு வருகிறோம். இதில் எங்களுக்கு மன மகிழ்ச்சியும், ஆத்ம திருப்தியும் தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.