பதிவு செய்த நாள்
16
பிப்
2022
03:02
தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும். மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோயில்களில் இந்நாளில் தெப்பத்திருவிழா நடக்கும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபடுவர்.
புனித தீர்த்தங்களில் எல்லாநாட்களும் நீராடலாம் என்றாலும், குறிப்பிட்ட நாட்களில் நீராடுவது சிறப்பானதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மகாமக குளத்தில் நீராடுவதற்கு அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் ஆகிய நாட்கள் சிறப்பானதாகும்.புனிதமான மகாமக தீர்த்தம் கும்பகோணத்தில் மூன்று ஏக்கர் பரப்பில் மகாமகக்குளம் அமைந்துள்ளது. ஒருமுறை உலகம் அழிய இருந்த காலத்தில், படைப்புக்கலன் தாங்கிய அமுதம் நிரம்பிய கும்பத்தை சிவன் அழித்தார். அவ்வாறு பெருகிய அமுதமே இந்தக் குளம் என்று சொல்வதுண்டு. மாசிமகத்தன்று இக்குளத்தில் நீராடுவது புனிதமானது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் மிகவும் சிறப்பானது. இக்குளத்தில் பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள், நவகன்னியரான கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு நதிகள் நீராடி புண்ணியம் அடைந்தன. பவுர்ணமியன்று நீராடுவோருக்கு ஏழேழு பிறவிக்கும் நன்மை ஏற்படும். மாசித்திருவிழாவின் பத்தாம்நாளில் கும்பேஸ்வரர் பஞ்சமூர்த்தியுடன் இந்த குளக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குகிறார்.