திருக்கோவிலூர் கோவில் இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2012 11:07
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் திரவுபதியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு கடைகள் முழுவதுமாக அகற்றப்பட்டன.திருக்கோவிலூர், கீழையூர் நான்குமுனை சந்திப்பில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து கடைகட்டி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 5ம் தேதி கடைகள் அகற்றும் நடவடிக்கை துவங்கியது. மொத்தம் உள்ள 8 கடைகளில் இரண்டு கடைகாரர்கள் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது. நேற்று கலெக்டர் சம்பத், எஸ்.பி., ஆகியோரின் ஒப்புதலுடன் விழுப்புரம் இணை ஆணையர் பரஞ்ஜோதி உத்தரவின்பேரில் உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் வெங்கடேசன், ஆய்வாளர் செண்பகவள்ளி மற்றும் துறை அலுவலர்கள் வருவாய்த்துறை, போலீசார் முன்னிலையில் எஞ்சிய கடைகளையும் பூட்டி "சீல் வைத்தனர். கோவில் வளாகத்தில் கொட்டகை போட்டு வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கடைகளும் அதிரடியாக அகற்றப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.