காலையும், மாலையும் ஒரே மாதிரியான வேலை. வித்தியாசமே இல்லாத நாட்கள் என பலரும் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். தாங்கள் செய்யும் வேலையில் ஈடுபாடு இல்லாததே இதற்கு காரணம். இப்படி இருப்பவர்களால் எந்தவொரு சாதனையையும் செய்ய இயலாது. 1867 ல் இத்தாலியை சேர்ந்த ஆர்ட்டூரோ டொஸ்கானினி தமது 19வது வயதில் இசைநடத்துனராக மேடையேறினார். சுறுசுறுப்பில் அவர் தேனீ. 87 வயதிலும் அவர் உலக அரங்குகளில் நிகழ்ச்சிகளை நடத்தினார். அவரது மகனிடம், ‘‘உங்கள் தந்தையின் வெற்றிக்கு ரகசியம் என்ன’’ என்று சிலர் கேட்டனர். அதற்கு அவர், ‘‘எனது அப்பா இசைக்குழுவை நடத்தினாலும், ஆரஞ்சுப்பழத்தை உரித்தாலும் இரண்டையுமே ஒரே ஈடுபாட்டோடுதான் செய்வார்’’ என கூறினார். தங்கள் வேலையை ரசித்து செய்பவர்களால் மட்டுமே வெற்றிச் சிகரங்களை தொடமுடியும். எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். வேலை என்பது போராட்டமல்ல. அது கணுக்கணுவாய்ச் சுவைக்க வேண்டிய கரும்பு. அனுபவித்து ஆட வேண்டிய விளையாட்டு. விநாடி விநாடியாய்க் கொண்டாட வேண்டிய திருவிழா. எனவே இனியாவது உற்சாகமான மனதோடு பணியாற்றுங்கள். நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும்.