ரால்ஃப் பார்லெட் என்ற பேச்சாளர் விதி குறித்து பேச கண்ணாடி ஜாடியுடன் மேடைக்கு வந்தார். அந்த ஜாடியில் சிறிய பீன்ஸ் விதைகளும், பெரிய அளவிலான வால்நட்டும் இருந்தன. ஜாடியை ஒருமுறை குலுக்கிவிட்டு அங்கிருந்தவர்களுக்கு அதைக் காண்பித்தார். அளவில் பெரிய வால்நட்கள் ஜாடியின் மேல் பகுதியிலும், பீன்ஸ் விதைகள் கீழேயும் இருந்தன. ‘‘நண்பர்களே... பார்த்தீர்களா. அளவில் சிறியவை கீழும், பெரியவை மேலும் எப்போதும் தங்கும். இது இயற்கை நியதி. பீன்ஸ் மேலே வர வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, அது அளவில் பெரியதாக வளர்வது. அதைவிட்டு நாம் எத்தனைதான் உதவினாலும், காலத்தின் குலுக்கலில் அது கீழேயே தங்க நேரிடும். அதுபோல்தான் நாமும். வாழ்க்கையின் நல்ல நிலைக்கு வரவேண்டுமானால் நாம்தான் முயற்சி செய்ய வேண்டும். யாரவது நமக்கு உதவி செய்யமாட்டார்களா... எப்படியாவது முன்னேறிவிட மாட்டோமா என ஏங்கும் நபர்களுக்கு இது பொருந்தும். இப்படி ஏங்கும் காலத்தில் சிறிய முயற்சி செய்தாலே போதும். காலத்தின் கையில் பெரியதாக மாறிவிடும். மாறாக வேடிக்கை பார்த்தால் தங்கம் கிடைக்காது. அதுதான் விதி. எனவே அறிவையும், தகுதியையும் வளர்த்துக்கொள்ளுங்கள். நல்ல வாய்ப்புகள் அதுவாகவே உங்களைத்தேடி வரும். பூத்துள்ள மலர் வண்டுக்கு அழைப்பு விடத்தேவையில்லை. வண்டு தானாக வரும்’’ என்றார்.