மகாபாரதம் சாந்தி பர்வத்தில் சிவராத்திரியின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மர் சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு சொன்னார். இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு. இவரை அஷ்டவக்கிர முனிவர் என்பவர் ஒரு சிவராத்திரி நாளில் சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னர் முனிவரிடம், “ஐயனே! நான் ‘சுஸ்வரன்’ என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள் பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே தங்கி விட்டேன். மிருகங்களிடமிருந்து தப்பிக்க ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசிமயக்கத்தால் துாக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பொழுது புலர்ந்தது. அந்த நாள் சிவராத்திரி என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. மரணம் ஏற்பட்டு என் உயிர் நீங்கிய பின் சிவதுாதர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். ‘நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று சிவலிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் உனக்கு நற்கதி கிடைத்தது’ என்றனர். அதனால் சித்திரபானு என்ற பெயரில் இப்பிறவியில் மன்னராக பிறக்கும் பேறு பெற்றேன்” என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் பணக்காரர்களாக இருப்பர். அவர்களின் சந்ததியும் வளத்துடன் வாழ்வர்.