பதிவு செய்த நாள்
01
மார்
2022
07:03
எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் பரப்பிரம்மம் சிவபெருமான் ஆவார். பொதுவாக புண்ணிய காலங்கள் என்பது நமக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. இதுபோன்ற காலங்களில் நாம் செய்யும் சிறு புண்ணியம் கூட பெரிய பலன் தரும்.
அதுபோன்ற சிறப்பு மிகுந்த திருநாள் தான் சிவராத்திரி ஆகும். சிவராத்திரி தினத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை மகாசிவராத்திரி, மாதசிவராத்திரி, பட்ச சிவராத்திரி என்பதாகும். மகா சிவராத்திரி என்பது வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நிகழும் ஒன்றாகும். மாசி மாதம் தேய்பிறை, சதுர்த்தி திதி கூடிய நாளில் வரும். முன்பு ஒரு காலத்தில் இந்த அகில உலகத்திலும் யார் பெரியவர் என்று பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் சர்ச்சை மூண்டது. அதன் காரணத்தால் படைத்தல், காத்தல் தொழில் பாதிப்பு அடைந்தது. அவர்களுக்குள் போர் உண்டானது. விஷ்ணு, பிரம்மாவின் மீது பாசுபதாஸ்திரம் ஏவ, பிரம்மாவும் விஷ்ணு மீது பாசுபதாஸ்திரத்தை ஏவினார். இரண்டும் சம பலம் உடையதால் விஷ ஜுவாலையை கக்கின. உலகம் முழுவதும் துன்புற்ற ரிஷிகளும், தேவர்களும் பரமசிவனை வேண்டினர். அப்பொழுது உலகை காக்கும் பொருட்டு ஈசன் இவர்களின் நடுவே தேஜோலிங்கமாய் அக்னிபிழம்பாய் காட்சி தந்தார்.பின் முப்புரத்தை எரித்த நகை முகத்துடனும், திருநீற்றால் வெளுத்த வடிவமுமாய் தோன்றினார்.பிறகு லிங்கோத்பவ மூர்த்தியாக சிவன் காட்சி தந்தார்.
அப்பர், சுந்தரர், மணிக்கவாசகர், திருமூலர் மற்றும் திருமுறை பாடிய பெருமக்கள் அனைவரும் இச்செய்தியைச் சுட்டிக் காட்டி ஒரு பாடலாவது பாடாமல் தங்கள் பணியை நிறைவு செய்யவில்லை எனலாம். சிவபெருமான், லிங்கோத்பவ மூர்த்தியாக தோன்றிய நாள்தான் சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி தினத்தில் சிவநாமத்தையும், சிவ பூஜையும் செய்வோருக்கு, சிவலோக பிறவி கிடைக்கும் என்பது நிச்சயம். ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கு மஹாசிவராத்திரி மிகமிக முக்கியமான நாள். குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கும், உலகில் சாதிக்க விரும்புபவர்களுக்கும் கூட இது முக்கியமான நாள். இந்த நாளின் முக்கியத்துவம் கருதி நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் இன்று காலை முதலே வழிபாடுகள் நடந்து வருகிறது பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து லிங்க ரூபத்தில் இருக்கும் சிவனை வழிபாடு செய்து வருகின்றனர். இன்று இரவு விழித்திருந்து சிவனை வழிபடுவது என்பது கண்விழிக்கும் இரவாக இல்லாமல் நீங்கள் உங்களுக்குள் மலரும் இரவாக விழித்தெழும் இரவாக இருக்கட்டும்.
-எல்.முருகராஜ்.