ஒரு முறை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை பொத்தினாள், உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டதால் எங்கும் இருள் சூழ்ந்தது . உயிர்கள் எல்லாம் கலங்கின. உடனே சிவன் நெற்றிக்கண்ணைத்திறந்தார். அதன் வெப்பம் தாளாமல் அனைவரும் பயந்தனர். பார்வதி அன்று இரவு முழுக்க விழித்திருந்து அபிஷேகம் செய்து அவரை குளிரச்செய்தாள். அந்த இரவே சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. சாகாவரம் தரும் அமிர்தத்தை வேண்டி தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தனர். வாசுகி பாம்பை கயிறாகவும் , மந்தர மாலையை மத்தாகவும் கொண்டு கடைந்த போது பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. அதை திரட்டி விழுங்கிய சிவன் மயக்கம் வந்தது போலக்கிடந்து திருவிளையாடல் புரிந்தார். அன்றிரவில் நான்கு ஜாமங்களிலும் தேவர்கள் அவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி .