பதிவு செய்த நாள்
02
மார்
2022
10:03
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு, சுவாமிக்கு பால், தயிர். இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு மங்கள வாத்யங்கள் இசைக்க சிவாச்சாரியர்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று மாலை துவங்கி, இன்று(04ம் தேதி) அதிகாலை வரை விடிய விடிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தது.
யுனெஸ்கோ நிறுவனம் உலக மரபு சின்னமாக அறிவித்து போற்றி பாதுகாத்து வரும் தஞ்சாவூர் பெரியகோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, 19வது ஆண்டாக பிரகன் நாட்டியாஞ்சலி விழா நேற்று மாலை துவங்கி, இன்று (04ம் தேதி) நடந்தது. இதில், 200 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்று கொண்டனர். புகழ் பெற்ற நடன கலைஞர்களான சென்னை மீனாட்சி சித்தரஞ்சன், சித்ரா முரளிதரன், விஜயம் கார்த்திக், கோவை ஜெயந்தி ராமசந்திரன், பெங்களூரு அணில் ஐயர், சுபர்ண வெங்கடேஷ், அஞ்சனா குப்தா, ஹைதராபாத் சுரேந்திரநாத், மும்பை ஹரி கல்யாணசுந்தரம், ரேவதி ஸ்ரீனிவாசராகவன், தஞ்சாவூர் சந்திரசேகரன் கிட்டப்பாபிள்ளை உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன், தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் செய்து இருந்தனர். மேலும், பெருவுடையாருக்கு நான்கு கால பூஜைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.