பதிவு செய்த நாள்
02
மார்
2022
10:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மஹா சிவராத்திரி விழா நடந்தது.
மாசி மாதம், அமாவாசைக்கு முன் வரக்கூடிய திரயோதசி மற்றும் சதுர்த்தசி திதிகள் சந்திக்கும் நாளில், பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும், யார் பெரியவர் என்ற அகந்தையை ஒழித்து, ஜோதிப்பிழம்பாகவும், லிங்கோத்பவர் வடிவாகவும், அருணாசலேஸ்வரர் காட்சி கொடுத்த தலம் திருவண்ணாமலை. அவ்வாறு காட்சி கொடுத்த நாளே, மஹா சிவராத்திரி.
அதன்படி மஹாசிவராத்திரியான நேற்று, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலையில், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர் மற்றும் உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை, 5:00 முதல், மதியம், 2:00 மணி வரை, லட்சார்ச்சனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, முதல்கால பூஜை, இரவு, 11:30 மணிக்கு, இரண்டாம்கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி மூல கருவறையின் பின்புறமுள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம், இன்று அதிகாலை, 2:30 மணிக்கு மூன்றாம்கால பூஜை, அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடத்த, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. கோவில் வளாகத்தில், நேற்றிரவு பன்னிரு திருமுறை இசைக்கச்சேரி, நாதஸ்வர நிகழ்ச்சி, பரத நாட்டியம், சொற்பொழிவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.