பதிவு செய்த நாள்
02
மார்
2022
03:03
சேலம்: மகா சிவராத்திரியையொட்டி, 678 கிலோ சந்தன பவுடரால், 10 ஆயிரத்து, 8 சிவலிங்கம் உருவாக்கி சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மகா சிவராத்திரியையொட்டி, சேலம், பொன்னம்மாபேட்டையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், வாசவி கிளப், சேலம் ஸ்மார்ட் பாய்ஸ், பொன்னம்மாபேட்டை ஆரிய சமாஜம் இணைந்து, 678 கிலோ சந்தன பவுடரால், 10 ஆயிரத்து, 8 சிவலிங்கங்களை உருவாக்கினர். இவற்றை, ‘ஓம் நமச்சிவாயா’ என உச்சரித்தபடி வடிவமைத்தனர். தொடர்ந்து அவற்றுக்கு லட்சார்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வை கண்காணித்த, ‘விருக்க்ஷா புக் ஆப் வேர்ல்டு ரெகார்டு’ அமைப்பினர், உலக சாதனையாக அங்கீகரித்தனர்.
இதுகுறித்து லிங்கங்களை உருவாக்கும் பணியின் ஒருங்கிணைப்பாளர் குமரேசன் கூறியதாவது: உலக அமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ, இதுவரை யாரும் செய்யாதபடி துாய்மை சந்தன பவுடரால், 10 ஆயிரத்து, 8 லிங்கங்கள் தயாரித்து, ‘ஓம் நமச்சிவாயா’ எழுத்து வடிவில் அமைத்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்று நாள் பூஜை செய்து, அதில் பங்கேற்போருக்கு சந்தன லிங்கம் பிரசாதமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.