‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். சிவனை இவர் ‘பித்தன்’ என அழைக்கக் காரணம் என்ன தெரியுமா? சுந்தரருக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், அவரை ஆட்கொள்ள நினைத்த சிவன், முதியவர் வேடத்தில் வந்தார். சுந்தரர் தன் முன்னோருக்கும், தனக்கும் அடிமை என்றார். “ஏ பித்தனே! நீ யார்? என்ன உளறுகிறாய்?” என சுந்தரர் கடிந்து கொண்டார். பின்பு தான் வந்தது சிவன் என்ற உண்மை புரிந்தது. தன்னைப் பாடும்படி சிவன் கேட்கவே, என்ன சொல்லி ஆரம்பிப்பது என சுந்தரர் குழம்பினார். “என்னை பித்தன் என்று திட்டினாயே! அந்த வார்த்தையிலேயே துவங்கு” என்றார். சுந்தரரும் அந்த வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொண்டார். சிவனின் மனைவி பார்வதி கருணைக்கடலாக விளங்குகிறாள். தன் பிள்ளைகளான உலக மக்கள் எவ்வளவு தவறு செய்தாலும் பொறுத்துப் போகிறாள், மன்னிக்கிறாள். ஆனால் அவரது இன்னொரு மனைவியான கங்கை அப்படியல்ல. ஒருவர் தண்ணீரில் விழுந்து விட்டால் மூன்று முறை மூழ்கி மூழ்கி வெளியே வருவார். அதற்குள் அவரை யாரும் காப்பாற்றாவிட்டால் ஒரேயடியாக மூழ்கி விடுவார். இதனால் தான் ‘தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்’ என்பர். அதிக தவறுகளை மன்னிக்கும் பார்வதியை உடலில் வைத்திருக்கும் சிவன், மூன்றே பிழைகளை மட்டும் மன்னிக்கும் கங்கையை தலையில் துாக்கி வைத்திருக்கிறார். நாம் நமக்கு அதிக நன்மை செய்பவர்களைத் தான் தலையில் துாக்கி வைத்துக் கொண்டாடுவோம். சிவனோ குறைந்த பிழை பொறுப்பவளை தலையில் துாக்கி வைத்துள்ளார். இதனால் தான் அவரைப் பித்தன் என்கிறோம்.