சித்தூர் : ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
காளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 9 ஆவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை)அதிகாலை முதல் ஆதி தம்பதியர்களின் (சிவ-பார்வதி)களின் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வேத பண்டிதர்கள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு சமயத்தில் கங்கா பவானி சமேத சிவபெருமான் ,ஞானப்பிரசுனாம்பிகா அம்மையாரின் உற்சவ மூர்த்திகளை சிவன் கோயில் அலங்கார மண்டபத்தில் சுவர்ண ஆபரணங்கள் (தங்க நகைகளுடன்) திருமலை -திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய பட்டுவஸ்திரங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்தனர் .
அதனைத் தொடர்ந்து கங்கா பவானி சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சுவாமி யானை வாகனத்திலும் ஞானபிரசுனாம்பிகை தாயார் சிம்ம வாகனத்திலும் ஊர்வலமாக சிவன் கோயில் திருமண மண்டபம் வரை வந்தனர் .இதனை தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் , மேளதாளங்கள் முழங்க சிவ-பார்வதி களின் திருமண நிகழ்ச்சிகள் தொடங்கின . கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக திருக்கல்யாண உற்சவத்திற்கு கைக்கால வம்சத்தினர் உபயதாரர்களாக இருந்து வருகின்றனர். இந்த வம்சத்தைச் சேர்ந்த நெல்லூர் மாவட்டம் செம்பேடு கிராமத்தினர் உட்பட அதன் சுற்றியுள்ள 14 கிராமங்களை சேர்ந்தவர்கள் உபயதாரர்களாக விளங்குகின்றனர். இதேபோல் தமிழகத்தில் திருத்தணி பகுதியை சேர்ந்த செங்குந்தர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஞானபிரசுனாம்பிகா அம்மையாருக்கு உபயதாரர்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் காளஹஸ்தீஸ்வரர் சிம்ம வாகனத்திலும் ஞானபிரசுனாம்பிகை தாயார் சிம்ம வாகனத்திலும் ஊர்வலமாக திருக்கல்யாண மண்டபம் வரை கொண்டு வந்து கணபதி பூஜை ,புன்னியாவசனம் ,வருண பூஜையை தொடர்ந்து சிறப்பு கலசத்தை ஏற்பாடு செய்ததோடு ஹோமம் நடத்தியதோடு , சண்டிகேஸ்வரர் மூலமாக சுவாமி அம்மையார்களுக்கு இடையே கல்யாண தரகராக இருந்தனர் . இதனைத் தொடர்ந்து சுவாமி திருக்கல்யாண உற்சவத்தை தொடங்கியதோடு கங்கன தாரணம் ,மங்கள வாத்தியங்களுடன் மேளதாளங்களுடன் மாங்கல்ய தாரனம் சம்பிரதாயமாக முறையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது .இதில் நூற்றுக்கணக்கான பொது மக்களும் திருமண வாழ்க்கையில் இணைந்தனர்.(திருமணம் செய்து கொண்டனர்). இதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி தம்பதியினர் ,சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக.சீனிவாசுலு தம்பதியினர் சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.