ஒரு தேவதை உங்கள் முன் தோன்றி, ‘‘தினமும் உன் கணக்கில் ரூ.86,400/– டெபாசிட் செய்கிறேன். அதில் நீ எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்து. ஆனால் அந்த நாள் முடிவடையும்போது நீ பயன்படுத்தாமல் இருக்கும் தொகையை, திரும்பவும் எடுத்துக்கொள்வேன்’’ என்கிறது என வைத்துக்கொள்வோம். தினமும் அதில் ஒரு ரூபாயாவது நீங்கள் மிஞ்சவிடுவீர்களா... முழுப்பணத்தையும் எப்படி செலவழிப்பது என்று யோசித்து செலவு செய்துவிடமாட்டீர்கள். உண்மையில் தேவதை ஒன்று அப்படி ஒரு வரத்தை உங்களுக்கு அளித்துள்ளது. அதுதான் காலம். அது பணத்தைவிட விலை மதிப்புள்ள 86,400 விநாடிகளை உங்களுக்கு ஒருநாளில் தருகிறது. அதில் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்... என்று கேட்டால் நிச்சயம் அங்கு கேள்வி எழும். ஏனென்றால் பலரும் நேரத்தை சரியாக பயன்படுத்துவதில்லை. திட்டமிட்ட வாழ்க்கை இல்லாததே இதற்கு காரணம். திட்டமிட்ட பணி இருந்தால் வீண் பேச்சு, வேடிக்கை பார்த்தல், பிறரது விஷயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்தல் போன்றவற்றில் ஈடுபடமாட்டோம். உங்களது கனவு நிறைவேற வேண்டுமெனில் நேரத்தை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக செலவிடுங்கள். காலதேவதையின் டெபாசிட் எப்படியெல்லாம் செலவாகி இருக்கிறது என்று கணக்கிடுங்கள். இனியும் ஆசை எப்போது நிறைவேறும் என நினைத்து காலத்தை வீணடிக்காதீர்கள். ஆசை நிறைவேறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.