இசைக்கலைஞர் கடம் விநாயகராம். புகழின் உச்சத்தை அவர் அடைவதற்கு காஞ்சி மஹாபெரியவரின் அருளும், அவரது பெரியப்பா மகனான பிரதோஷம் மாமாவின் ஆசியுமே காரணம். ஒருமுறை விநாயகராமிற்கு சங்கீத நாடக அகாடமி அவார்டு கிடைத்தது. மகிழ்ச்சியுடன் பிரதோஷம் மாமாவிடம் தெரிவித்த போது, ‘‘இந்த நல்ல செய்தியை மஹாபெரியவரிடம் சொல்லி ஆசி பெறு’’ என தெரிவித்தார். காஞ்சி மடத்திற்கு விநாயகராம் சென்று பெரியவரிடம் கூறிய போது, ‘‘ அவார்டா...விருதா... என்ன கிடைச்சிருக்கு’’ என்று கேட்டார். ஆனால் விநாயகராமுக்கு விஷயம் புரியவில்லை. அருகில் இருந்த தொண்டர் ஒருவர்,‘‘ இது கேஷ் அவார்டா இல்லை; வெறும் பட்டமளிப்பு மட்டுமான்னு கேட்கறார்’’ என விளக்கினார். ‘கேஷ் அவார்டு தான்’ என்றார் விநாயகராம். ‘‘எவ்வளவு கொடுப்பா’’ எனக் கேட்டார் பெரியவர். ‘‘15,000 ரூபாய்’’ என்றார். ஆனால் அந்த ஆண்டு முதல் பரிசுத்தொகை 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருந்தது. இது விநாயகராமுக்கு தெரியவில்லை. அவார்டை பெற்றுக் கொண்டு ஊர் திரும்பியதும் பிரதோஷம் மாமாவிடம் இதனை விவரித்தார். ‘கூடுதலாக கிடைத்த பணம் பத்தாயிரத்தை நாளைக்கே ஒரு ரூபாய் நாணயங்களாக மாற்றி பெரியவாளின் பாதங்களில் சமர்ப்பிக்கலாம்’’ எனத் தெரிவித்தார் பிரதோஷம்மாமா. காசோலையாக அளித்த 25,000 ரூபாயை வங்கியில் கொடுத்து பணமாக மாற்ற இரண்டு நாளாகும். அதுவும் கூட பணமாகத் தானே கிடைக்கும். நாணயமாக எப்படி மாற்ற முடியும்...நாளை ஞாயிறு என்பதால் விடுமுறை ஆயிற்றே...’ என யோசித்தார். ‘‘ ஆடிட்டர் பாலாஜின்னு ஒருத்தர் இருக்கார். அவரைப் போய் பார்த்து விஷயத்தைச் சொல்லு. பெரியவா அருளால் நல்லதே நடக்கும்’’ என பிரதோஷம் மாமா தெரிவித்தார். விநாயகராமுக்கோ நம்பிக்கை இல்லை. ஆனால் ஆச்சரியம் காத்திருந்தது. வாடிக்கையாளர் ஒருவர் அன்று காலையில் பத்தாயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை வங்கியில் செலுத்த வந்ததாகவும், சனிக்கிழமையான இன்று பணிநேரம் சீக்கிரம் முடிந்து விட்டதால் தன்னிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் ஆடிட்டர் பாலாஜி தெரிவித்தார். இதையறிந்த விநாயகராம் நெகிழ்ந்து போனார். சாத்தியம் இல்லாததையும் நடத்திட மஹாபெரியவர் துணைநின்றதை எண்ணி வியந்தார். மறுநாளே பாத காணிக்கையாக மஹாபெரியவருக்கு நாயணங்களை அளித்தார்.