பதிவு செய்த நாள்
04
மார்
2022
04:03
சிவாஜி நகர்: மொத்தம் 163 ஆண்டுகள் பழமையான பெங்களூரு சிவாஜி நகர் டாஸ்கர் டவுனிலுள்ள கிராம தேவதையான படவேட்டம்மன் கோவிலில் ஜீர்ணோத்தாரண மஹா கும்பாபிேஷக விழா நாளை துவங்குகிறது. நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
சிவாஜி நகர் டாஸ்கர் டவுனில், 163 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி கிராம தேவதையாக விளங்கியவர் படவேட்டம்மன்.இக்கோவிலில் அம்மனுக்கு ஆடி மாதத்தில் சிறப்பாக திருவிழா நடத்தப்படும். அப்போது காப்பு கட்டினால், இங்கு வசிப்போர், இப்பகுதியை விட்டு வெளியே செல்ல மாட்டார்கள். இக்கோவிலில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.
இக்கோவிலை ஐந்து தலைமுறைகளாக மறைந்த சின்னசாமி பூஜாரி சகோதரர்கள் பணியாற்றி பூஜித்து வந்தனர். இவர்களை அடுத்து அவரது மகன்கள் மறைந்த பரமசிவம் பூஜாரி குடும்பத்தினரும், கலைமாமணி சுந்தரமூர்த்தி பூஜாரி குடும்பத்தினரும் நிர்வகித்து வருகின்றனர்.
இத்தகைய சக்தி வாய்ந்த அம்மனுக்கு 12 ஆண்டுகளுக்கு முன், 41 அடி உயரத்தில் ராஜகோபுரம், 13 அடி உயரத்தில் விமான கோபுரம் எழுப்பி கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. தற்போது ராஜகோபுரத்தின் கிழக்கு பகுதியில், ஒன்பது அடி உயரத்திலும், ஐந்து அடி அகலத்திலும் காளி படவேட்டம்மன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.சிலையை சுற்றிலும் கண்ணாடி பேழை பொருத்தபட்டுள்ளது. கோவில் மேல்புறத்தில் ஐந்து சிங்கங்கள், ஒரு பூதம் விக்ரஹம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் இடதுபுறம் நாககன்னி, விநாயகர், வலதுபுறம் நவக்கிரஹம், முன்புறம் துவார சக்திகள் கண்ணாடி பேழையில் அமைக்கப்பட்டுள்ளது.கோவிலின் மூலவர் படவேம்மன் விக்ரஹம், பல்வேறு கலவையினால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், அபிஷேகம் நடத்தப்பட மாட்டாது. உற்சவருக்கு அபிஷேகம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு அம்சம் கொண்ட கோவிலின் ஜீர்ணோத்தாரண மஹா கும்பாபிேஷக விழா நாளை துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை, காலை 8:45 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6:00 மணிக்கு முதல் கால யோக பூஜை; இரண்டாம் நாளான மார்ச் 6ல், காலை 9:00 மணிக்கு சூர்ய பூஜை.ஹோம பூஜை, 9:30 முதல் 10:30 மணி வரை அம்மன் விமான கோபுரம், ராஜகோபுரம், காளி படவேம்மன், விநாயகர், நவக்கிரஹம், துவார சக்திகளுக்கு புனித நீர் ஊற்றப்படுகிறது. 11:00 மணிக்கு தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வினியோகம், மதியம் 1:00 மணிக்கு அன்னதானம், மாலை 5:00 மணிக்கு கலாசார நிகழ்ச்சியுடன் அம்மனின் தேர் ஊர்வலம், இரவு 10:00 மணிக்கு மஹா மங்களாரத்தி காண்பிக்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை வேலாயுதம், யோகலிங்கம் மற்றும் படவேட்டம்மன் பூஜாரி குடும்ப அறக்கட்டளையினர்செய்துள்ளனர்.