பதிவு செய்த நாள்
04
மார்
2022
04:03
சென்னை, :மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் காணாமல் போன சம்பவத்தில், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்,என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை, ஓட்டேரி, ஆதி படவேட்டையம்மன், பிரிக்ளின் சாலையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர், அயனாவரம் சர்வ சக்தி விநாயகர் ஆகிய கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.பின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஆதிபடவேட்டையம்மன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது, திருப்பணிகள் மேற்கொண்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.உள்பிரகார முருகன் சன்னதி ஆகமவிதிப்படி புனரமைக்கப்படும். பிரிக்ளின் சாலையில், 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீர ஆஞ்சநேயர் கோவில் மூன்று அடி பள்ளத்தில் உள்ளது.திருப்பணிகள் தொடங்கப்பட்டு கோவில் உயரத்திற்கு கொண்டு வரப்படும். அயனாவரம், சர்வ சக்தி விநாயகர் கோவில், 50 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களால் கட்டப்பட்டது.அவர்கள் எழுதிய உயில் படி, அறநிலைய துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விரைவில் இக்கோவிலுக்கும் திருப்பணிகள் தொடங்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.கோவில்கள் வளர்ச்சிக்கும், பக்தர்கள் வசதிக்கும் என ஆய்வு செய்துள்ளோம். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய கோவில்களில், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.கோவில் விழாக்கள் நடத்துவது குறித்த வீரமணி கருத்துக்கு, கருத்து பரிமாற்றங்களை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. அரசியல் கலப்பு இல்லாமல், சிறப்பாக சிவராத்திரி விழா நடத்தி உள்ளோம்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் சிலை காணாமல் போனது குறித்து, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் குளத்தில் சிலை உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், திரு.வி.க., நகர் எம்.எல்.ஏ., தாயகம் கவி, சென்னை மண்டல இணைக் கமிஷனர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.