பதிவு செய்த நாள்
05
மார்
2022
03:03
காஞ்சிபுரம்: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில், ரத்தின விநாயகர், ஆதி சங்கரர், மஹா பெரியவர் விக்கிரகங்களுக்கு பிரதிஷ்டை செய்து, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கும்பாபிஷேகம் செய்தார்.
வாலாஜாபேட்டை மாசிலாமணி நகரில், 1983ம் ஆண்டு மஹா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால் ஆதி சங்கரர் பாதம் எனும் சன்னிதி உருவாக்கப்பட்டது.ஒரு சன்னிதி கோவிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கோவிலை நிர்வகித்து வரும் சங்கர மடம் கிளை நிர்வாகிகள் தீர்மானித்தனர். அங்கு விநாயகர், ஆதிசங்கரர், மஹா பெரியவர் விக்கிரகங்கள் அமைக்க, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுமதியுடன், திருப்பணிகள் நடந்தன. இப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, புதிய விக்கிரகங்களுக்கு பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்தை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தார். காலை 8:30 மணிக்கு மூலவர் விமான கலசத்திற்கு, சுவாமிகள் புனித நீர் ஊற்றி, தீபாராதனை காட்டினார்.இந்நிகழ்ச்சியில் ரத்தினகிரி பாலமுருகன் சுவாமிகள் மற்றும் சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர்.