குளித்தலை அருகே மேல் நங்கவரத்தில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேல் நங்கவரத்தில் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலை புணரமைத்து கும்பாபிஷேகம் செய்ய கிராம பொது மக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவு செய்து கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று கும்பாபிஷேக விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. முன்னதாக விரதம் மேற்கொண்ட கிராம பொதுமக்கள் நேற்று காலை பெருகமணி காவிரி ஆற்றில் இருந்து மேளதாளத்துடன் புனித நீர் எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகவேள்வி சாலையில் புனித கும்பத்திற்கு சிவாச்சாரியார்கள் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, சிறப்பு யாக வேள்வி பூஜைகள் அர்ச்சனை, ஆராதனைகள் செய்தனர். இன்று காலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் யாக வேள்வி சாலையில் இருந்த புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனையும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பின்பு கோவில் கருவறையில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு அபிஷேக ,ஆராதனையும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்திற்கு நங்கவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொது மக்கள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் விழாக்குழுவின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.