பதிவு செய்த நாள்
30
ஜன
2026
11:01
பழநி; பழநியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிப்.1., இல் திண்டுக்கல் போலீசார் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.
பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா ஜன.,26 முதல் பிப்.,4, வரை நடைபெற்று வருகிறது இதில் முக்கிய நிகழ்வான பிப்.,1, தைப்பூசத்தன்று பழநி வரும் பக்தர்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த போலீசார் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கடந்த ஆண்டு பக்தர்கள் தேவர் சிலை, சன்னதி ரோடு, பாத விநாயகர் கோயில், அடிவாரம் காவல் நிலையம், குடமுழுக்கு மண்டபம் வழியாக பழநி முருகன் கோயில் சென்றனர். தற்போது கொடைக்கானல் ரோடு, தேவஸ்தான பேருந்து நிலையம் வழியாக கிரி வீதியில் சென்று குடமுழுக்கு மண்டபம் வழியாக முருகன் கோயிலை அடையலாம். அப்பகுதியில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
கிரி வீதியில் பக்தர்கள் வலம் வரவும், பாத விநாயகர் கோயில் செல்லவும் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
படிப்பாதை வழியாக கீழே இறங்கி வரும் பக்தர்கள் அய்யம்புள்ளி ரோடு வழியாக மட்டுமே வெளியே செல்ல கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு படிப்பாதை வழியாக கீழே இறங்கி செல்லும் பக்தர்கள் கிரி வீதியில் இருந்து வெளியேறும் அனைத்து பாதைகளிலும் வெளியேறலாம்.
வழிகள் மாற்றப்பட்டுள்ளதால் கொடைக்கானல் ரோடு, கேட் 1, தேவஸ்தான பஸ் ஸ்டாண்ட் கேட் 2 பகுதிகளை அடையலாம்.
சிறப்பு பஸ்கள் நிறுத்த பழநியாண்டவர் பண்பாட்டுக் கல்லூரியில் தற்காலிக பஸ் ஸ்டாண்டாக மாற்றப்பட்டுள்ளது. டவுன் பஸ்கள் மட்டும் பழநி பஸ் ஸ்டாண்டுக்கு அனுமதிக்கப்பட உள்ளது.
திண்டுக்கல், மதுரை மார்க்கமாக செல்லும் அரசு, தனியார் பஸ்கள் மூலச்சத்திரம், ஒட்டன்சத்திரம், நெடுஞ்சாலை வழியாக மானூர் பைபாஸ், பாலாஜி மில் ரோடு, பி.வி.பி பள்ளி, ராமநாத நகர், கொடைக்கானல் ஜங்ஷன் வழியாக சிவகிரி பட்டி பைபாஸ் வழியாக பழநியாண்டவர் கல்லூரி தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர வேண்டும்.
கோயமுத்தூர், திருப்பூர்,உடுமலை மார்க்கம் பழைய தாராபுரம் ரோடு, புது தாராபுரம் ரோடு வழியாக பயணிகளை ஏற்றி வரும் அரசு, தனியார் பஸ்கள் மானூர் பைபாஸ், பாலாஜி மில் ரோடு, பி.வி.பி பள்ளி, ராமநாத நகர்,கொடைக்கானல் ரோடு ஜங்ஷன், சிவகிரி பட்டி பைபாஸ் வழியாக பழநியாண்டவர் காலேஜ் கல்லூரி தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அடைய வேண்டும்.
பக்தர்களின் வசதிக்காக மூன்று இலவச பஸ்கள், மானூர் பைபாஸ் பாலாஜி மில், பி.வி.பி பள்ளி, ராமநாத நகர், கொடைக்கானல் ஜங்ஷன், வழியாக சிவகிரி பட்டி வழியாக பழநியாண்டவர் கல்லூரிக்கு வந்து சேரும்.
அரசு, தனியார் பஸ்களில் வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு செல்ல ஏதுவாக ஆவின் பால் பண்ணை அருகே உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பக்தர்கள் இறங்கிவிடப்படுவர். அவர்கள் கேட்-1 வழியாக முருகன் கோயிலுக்கு இலகுவாக செல்ல இயலும். பக்தர்கள் இறக்கி விட்ட பின் பஸ்கள் பழநியாண்டவர் கல்லூரியில் உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்கள் வந்து சேரும்.
பழநியாண்டவர் கல்லூரி தற்காலிக பஸ் ஸ்டாண்டிலிருந்து இ.எஸ்.ஐ ஜங்ஷன் வழியாக கேட்-2 பகுதியை அடைந்து முருகன் கோயிலுக்கு பக்தர்கள் செல்லலாம்.
பக்தர் தங்களது வாகனத்தை பழநி நீதிமன்றம் கிழக்கு பகுதி, நீதிமன்ற தெற்கு பகுதி, ஆர்.வி.எஸ் மஹால் எதிரில், மயிலாடும்பாறை, ஆர்.டி.ஓ., ஆபீஸ், எல்.ஐ.சி ஆபீஸ், இடும்பன் குளம், ஆவின் பால் பண்ணை எதிரில், சித்திரை அப்பார்ட்மெண்ட் அருகே, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவஸ்தான பஸ் ஸ்டாண்ட், கோசாலை பஸ் ஸ்டாண்ட், தேவர் சிலை பின்புறம் ஆகிய பார்க்கிங் பகுதிகளை நிறுத்திக் கொள்ளலாம். மயில் ரவுண்டான வழியாக தேவர் சிலை,பாலாஜி ரவுண்டானா செல்வதற்கும், வேல் ரவுண்டானா வழியாக திரு ஆவினன்குடி செல்வருக்கும் பக்தர்களின் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ஆட்டோகளுக்கு தடை இல்லை. மேலும் பக்தர்கள் தங்கள் செல்லும் இடங்களுக்கு எளிதில் சென்றடைய கிரிவீதியை சுற்றி க்யூ.ஆர் கோடு உள்ள பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேற்படி க்யூ.ஆர் கோடு பயன்படுத்தி கூகுள் மேப் மூலமாக பக்தர்கள் தாங்கள் சென்று அடையும் இடங்களை எளிதில் சேரலாம். பக்தர்கள் தாங்கள் செல்லும் இடங்களை எளிதில் கண்டறிந்து செல்ல வசதியாக முக்கியமான இடங்களில்க்யூ.ஆர் கோடு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேற்படி பிளக்ஸ் பேனரை பயன்படுத்தி தாங்கள் இருக்கும் இடங்களை அறிந்து கொள்ள செல்லும் வழி கண்டறியும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.