பதிவு செய்த நாள்
08
மார்
2022
06:03
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா 13 ஆயிரம் பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர்.
பிரசித்திப்பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி கரந்த மலையில் உள்ள கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடினர். பின் அங்கிருந்து மஞ்சள் ஆடை அணிந்து புனித தீர்த்த குடங்களுடன் நத்தம் சந்தன கருப்பு கோவில் வந்தனர் . அங்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்கள், வர்ணக் உடைகளுடன் ஊர்வலமாக பல ஆயிரம் பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்து கோவிந்தா கோஷம் மிட்டு மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து பூசாரிகள் பக்தர்களுக்கு மஞ்சள் காப்பு கட்டினர். இதில் சுமார் நேற்று மட்டும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 13 ஆயிரம் பக்தர்கள் காப்புக்கட்டி 15 நாள் விரதத்தைத் தொடங்கினர். முன்னதாக நேற்று இரவு 9 மணிக்கு அம்மன் குளத்தில் இருந்து கம்பம் நகர வளமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 11,15, 18 ஆம் தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில் ,சிம்மம்,அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின் ரதத்தில் ஊர்வலமாக முக்கிய வீதிகளில் நகர்வலம் வரும். இவ்விழா நாட்களில் நேர்த்திக்கடன் வைத்த பக்தர்கள் மாவிளக்கு, கரும்புத் தொட்டில், அங்கப்பிரதட்சனம்,அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்துவர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பொது சுகாதாரப் பணி, குடிநீர் வசதிகளை பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்ஷா மேற்பார்வையில் செயல் அலுவலர் சரவணகுமார் செய்து வருகிறார்.