பதிவு செய்த நாள்
10
மார்
2022
08:03
மதுரை : உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, இரண்டு ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுடன் கோலாகலமாக நடக்க உள்ளது. முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.,14, ஆற்றில் அழகர் இறங்குதல் ஏப்.,16 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
கொரோனா தொற்றுப் பரவலால், மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா இரண்டு ஆண்டுகளாக கொடியேற்றம், திருக்கல்யாணம், திக் விஜயம் உள்ளிட்ட நிகழ்வுகள் பக்தர்கள் இன்றி நடந்தது.முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு, தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் இரண்டு ஆண்டுகளாக நடக்காத நிலையில் பக்தர்களுடன் இந்தாண்டு நடக்கிறது. திருவிழாவிற்கான முகூர்த்தகால் நடப்பட்ட நிலையில் கொடியேற்றம் மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்., 5ம் தேதி நடக்கிறது. இதை தொடர்ந்து அம்மனுக்கு ஏப்.,12ல் பட்டாபிேஷகம், 13ல் திக் விஜயம், 14ல் திருக்கல்யாணம், 15ல் தேரோட்டம் நடக்கிறது. ஆற்றில் அழகர் இறங்குவதற்கு, கள்ளழகர் அலங்காரத்தில் அழகர்கோவிலில் இருந்து வருவதை வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது. ஏப்.,16ம் தேதி அதிகாலை 5:50 முதல் 6:20 மணிக்குள் வைகையாற்றில் அழகர் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.இரு ஆண்டுகளுக்கு பின் மீனாட்சி திருக்கல்யாணத்தையும், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியையும் நேரில் பார்க்க இருப்பதால் பக்தர்கள் உற்சாகத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.