செம்பை பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2022 12:03
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை கிராமத்திலுள்ள புகழ்பெற்ற பார்த்தசாரதி கோவில் 108வது ஏகாதசி உற்சவம் நேற்று (10ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை 7 மணி அளவில் கொடியேற்ற நிகழ்ச்சி தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரியின் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து சகோதரிகளான சங்கீதா-சௌந்தர்யா ஆகியோரின் நாதஸ்வர கச்சேரி நடைபெறும். உற்சவத்தையொட்டி நடக்கும் சங்கீத உற்சவம் கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி 14ம் தேதி நடைபெறுகின்றன. காலை 8.45 மணிக்கு உஞ்சவிருத்தி, 10 மணிக்கு மண்ணூர் ராஜகுமாரனுண்ணி, சுகுமாரி நரேந்திர மேனோன் ஆகியோரின் தலைமையில் பஞ்சரத்னகீர்த்தனை பாடுதல், தொடர்ந்து இளம் இசைக் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடைபெறும். மாலை 6 மணிக்கு பிரகாஷ் உள்ளேரி குழுவின் ஹார்மோனியம் கச்சேரியும், 7க்கு விஜய் யேசுதாசின் இசைக் கச்சேரியும் நடக்கின்றன. இரவு 8 மணிக்கு பிரபல இசைக் கலைஞர் யேசுதாஸ் அமெரிக்காவில் இருந்து ஆன்லைன் வாயிலாக கச்சேரி நடத்துவார். 10 மணிக்கு பிரபல இசைக் கலைஞர் ஜயனின் இசைக் கச்சேரியுடன் சங்கீத உற்சவம் நிறைவடையும். 15ம் தேதி மூலவருக்கு நடக்கும் ஆறாட்டுடன் ஏகாதசி உற்சவம் நிறை பெறுகின்றன. 1914ல் செம்பை வைத்தியநாத பாகவதர் துவக்கி வைத்த கோவில் சங்கீத உற்சவத்தை பேரப்பிள்ளைகளான செம்பை சுரேஷம் பிரகாஷும் குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து தற்போது நடத்தி வருகின்றனர்.