பதிவு செய்த நாள்
11
மார்
2022
01:03
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், 61 லட்சத்து, 23 ஆயிரம் ரூபாயும், 195 கிராம் தங்கம், 357 கிராம் வெள்ளி பொருட்களை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
காரமடை அரங்கநாதர் கோயில், வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதனால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, அரங்கநாதப் பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். இக்கோவிலில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணுவது வழக்கம். இந்த முறை மாசிமகத் தேர்திருவிழா வந்ததையடுத்து, ஐந்து மாதங்களுக்குப் பிறகு உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி தலைமையில், காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், ஹிந்து சமய அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் ஹேமா ஆகியோர் முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடந்தன. கோவிலில், 11 இடங்களில் வைத்திருந்த உண்டியலை ஒவ்வொன்றாக எடுத்து வந்து, திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்கத்தினர், ஸ்ரீ ஓம்சிவா இறை இயக்க சேவை குழுவினர், கவுண்டம்பாளையம் சேவை குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கைகளை எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர். மொத்தமாக, 61 லட்சத்து, 23 ஆயிரத்து, 501 ரூபாயையும், 195 கிராம் தங்கமும், 357 கிராம் வெள்ளி பொருட்களையும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதில் பல பெண் பக்தர்கள் தங்க தாலியை காணிக்கையாக செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.