பதிவு செய்த நாள்
11
மார்
2022
06:03
பல்லடம்: பருவாய் கிராமத்தில், மாரியம்மன் மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா கோலாகலமாக நடந்தது.
பல்லடம் அடுத்த பருவாய் கிராமத்தில், ஸ்ரீமாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கும் இக்கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா மாசி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பொங்கல் பூச்சாட்டு விழா, பிப்.,22ம் தேதி மாலை, 6.00 மணிக்கு பொரி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, முளைப்பாரி இடுதல், காப்பு கட்டுதல், மாரியம்மன் கும்பம் தரித்தல், கம்பம் நடுதல் ஆகியவையும், இதையடுத்து, விநாயகருக்கு பொங்கல் வைத்தல், மாகாளியம்மன் கும்பம் தரித்தல், மற்றும் அம்மை அழைத்தல் நிகழ்வுகளும் நடந்தன. மார்ச் 8ம் தேதி நள்ளிரவு மாரியம்மன் மற்றும் மஹால் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மறுநாள் காலை ஆதிவிநாயகர் கோவிலில் இருந்து மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதையடுத்து பொங்கல் பூஜை, கும்பம் கங்கையில் விடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் மாரியம்மன், மற்றும் மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று மறுபூஜை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.