பகவதப் பிரியர்களும் வைணவ அன்பர்களும் விரும்பிச் சென்று தரிசிக்கும் புண்ணிய தலம் மதுரா. கண்ணன் அவதரித்து பல அற்புதங்கள் செய்த தலமல்லவா! யமுனை நதிக்கரையில் அமைந்த மதுராவிலும், அதற்கு அருகிலும் கண்ணனோடு தொடர்புடைய பல தலங்கள் இருக்கின்றன. கம்சனின் கோட்டை, கண்ணன் பிறந்த சிறைச் சாலை, காளிங்க நர்த்தனம் புரிந்த இடம், கம்சனைக் கொன்ற களைப்பு தீர கண்ணன் ஓய்வெடுத்துக்கொண்டே விச்ராந்தி காட், கண்ணன் லீலைகள் பல புரிந்த பிருந்தாவனம் என பல பகுதிகள். இப்பகுதிகள் அனைத்தையும் தரிசித்து வந்தால் மனதில் பேரமைதி தவழும் என்பது அனுபவப் பூர்வமான உண்மை. மதுராவில் கண்ணன் அவதரித்த சிறைச்சாலைப் பகுதியில் அமைந்துள்ள கோவிலையொட்டி மசூதியும் அமைந்துள்ளதால் இங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் சற்று அதிகம். என்றாலும் திரளான பக்தர்கள் அந்த புனித இடத்தை தரிசிக்க வந்தவண்ணம் உள்ளனர்.
இக்கோவிலிலிருந்து சற்று துõரத்தில் யமுனைக்கரையில் துவாரகதீஷ் கோவில் அமைந்துள்ளது. இங்கே துவாரகையில் அரசுபுரிந்த மன்னனாக கிருஷ்ணன் வணங்கப்படுகிறார். இங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் துõரத்தில் பிருந்தாவனம் உள்ளது. கண்ணன் விளையாடிய அற்புதமான பகுதி. இங்குள்ள ஆலயத்தில் மதன்மோகன் என்னும் பெயரில் கண்ணன் காட்சியளிக்கிறார். மதன்மோகன் என்றால் மனதை வசீகரிப்பவர் என்று பொருள். இதையடுத்து நிதீவன் என்னும் பகுதியில் அழகிய நந்தவனம் உள்ளது. இது கோபியருடன் கிருஷ்ணன் லீலைகள் புரிந்த இடம் என்கிறார்கள். இந்த நந்தவனத்தில் கிருஷ்ண லீலையை விவரிக்கும் பல சிற்பங்களைக் காணலாம். இவற்றைக் காண பகலில் மட்டுமே அனுமதியுண்டு. மாலைப்பொழுதானதும் கிருஷ்ணன் அங்கு வருவதாக ஐதீகம் உள்ளதால், அதன்பிறகு யாரையும் அங்கு அனுமதிப்பதில்லை.
இந்த கண்ணன் தல யாத்திரையில் தரிசிக்க வேண்டிய முக்கியமான இடம் கோவர்த்தன மலை. ஆயர்குலத்தையும் ஆவினங்களையும் மற்றும் பிற உயிரினங்களையும் கடும் மழைப் பிரவாகத்திலிருந்து காக்க இந்த மலையை அல்லவா கண்ணன் தன் ஒருவிரலில் குடையாக ஏந்தினான்! இம்மலையைக் காணும்போதே சிலிர்ப்பு உண்டாகிறது பிள்ளைப் பேறு உள்ளிட்ட பல பிரார்த்தனைகள் நிறைவேற கோவர்த்தன மலையை கிரிவலம் வருகின்றனர் பக்தர்கள். இத்தகைய பல கிருஷ்ணன் கோவில்களுக்கிடையில், யமுனைக் கரையில் யமீ-யமன் கோவிலும் உள்ளது. அதாவது எமனுக்கும் அவன் தங்கைக்குமான கோவில். அண்ணன்-தங்கை பாசப்பிணைப்புக்கு இது எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்குள்ள யமுனையில் அண்ணனும் தங்கையும் புனித நீராடி வழிபடுகின்றனர். இதனால் அண்ணனுக்கு நீண்ட ஆயுளும், தங்கைக்கு தீர்க்கமங்கலிப் பேறும் கிடைப்பதாக ஐதீகம். கண்ணன் அவதரித்த மதுராவில் ஒரு சிவாலயமும் அமைந்துள்ளது. இது கோபேஷ்வர் மகாதேவ் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ண லீலையைக்காண சிவபெருமான் கோபிகை வடிவம் கொண்டு இங்கு வந்தாராம். அந்த ஐதீகத்தின்படி இங்குள்ள சிவபெருமான் அர்த்த நாரீஸ்வரராக வணங்கப்படுகிறார். இவ்வாறு பல்வேறு வரலாற்றுச் சின்னங்களை தனக்குள் கொண்டு திகழ்கிறது மதுரா. ஒருமுறையாவது இத்தகைய தலங்களை தரிசித்துவருதல் இந்துக்களின் கடமை. உத்திரப்பிரதேச மாநிலத்தில், சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ரயில் வழியில் மதுரா அமைந்துள்ளது.