பதிவு செய்த நாள்
17
ஜூலை
2012
11:07
வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
சமனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின் வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங்காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே!
என குற்றாலத்தின் பெருமையை திரிகூடராசப்ப கவிராயர் தான் பாடிய குற்றாலக் குறவஞ்சியில் கூறியுள்ளார்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் குற்றாலம் ஒரு சிறந்த சுற்றுலா ஸ்தலமாகவும், சிறப்பு மிக்க புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் கோயில் பழமையும் பெருமையும் வாய்ந்ததாகும். இமயமலையில் பார்வதி திருமணம் நிகழ்ந்த நாளில் மூவுலகம் அங்கு ஒருங்கே கூடியிருந்ததால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்துள்ளது. இதனால் தென்புலத்தை சமன் செய்வதற்காக சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசைக்கு அனுப்பி வைத்ததாக ஐதீகம். அகத்திய முனிவர் தென் திசையிலுள்ள திரிகூடமலை இருக்கும் குற்றாலத்திற்கு வந்துள்ளார். அப்போது குற்றாலம் கோயில் வைணவர் கோயிலாக திகழ்ந்துள்ளது. அகத்திய முனிவர் குற்றாலநாதர் கோயிலுக்குள் செல்ல முயன்ற போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக தல புராணம் கூறுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த அகத்திய முனிவர் குற்றாலநாதராக திகழ்ந்த விஷ்ணுவை சிவனாக மாற்றியுள்ளார். அப்போது விஷ்ணு சிலை மீது கை வைத்து அகத்தியர் அழுத்தியதால் அது சிவலிங்கமாக வடிவம் கொண்டுள்ளது. அகத்தியர் அழுத்தியதால் சிவனுக்கு தலை வலி ஏற்பட்டதாகவும், இதனை போக்க அகத்தியர் மூலிகை தைலம் தயாரித்து சிவனுக்கு அபிஷேகம் செய்ததாகவும் திருக்குற்றாலநாதர் புராணம் கூறுகிறது. இதற்கு எடுத்துக் காட்டாக இன்றைக்கும் குற்றாலநாதர் கோயில் சங்கு வடிவத்தில் அமைந்துள்ளதை காணலாம். அரியும் சிவனும் ஒன்றே என்பதற்கு எடுத்துக்காட்டாக குற்றாலநாதர் கோயில் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல.
பண்டைய காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் குற்றாலநாதர் கோயிலுக்கு பல ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளனர். மேலும் குற்றாலநாதர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளும் கோயிலுக்கே வழங்கப்பட்டுள்ளன. சன்னதி பஜாரில் உள்ள கடைகள், கட்டடங்கள், காலிமனைகள் அனைத்தும் கோயிலுக்கு சொந்தமானதாக திகழ்கிறது. ஆண்டு தோறும் இந்த கட்டடங்கள், கடைகள், காலிமனைகளில் இருந்து வாடகை மூலம் குற்றாலநாதர் கோயிலுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. சுமார் 100 கடைகள், 50க்கும் மேற்பட்ட இதர கட்டடங்கள், காலிமனைகள் மூலம் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த வருமானம் முறையாக குற்றாலநாதர் கோயில் நிர்வாகத்திற்கு வருவது இல்லை என்பது வேதனை அளிப்பதாகும். கோயிலுக்கு சொந்தமான கடைகள், கட்டங்கள், காலிமனைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்வது கோயில் நிர்வாகம் ஆகும். கடந்த 2001ம் ஆண்டுக்கு பிறகு கடைகள், கட்டடங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. குற்றால சீசன், ஐயப்ப பக்தர்கள் சீசன் காலத்தில் தற்காலிக கடைகள் வைத்துக் கொள்வதற்காக ஏலம் விடப்படுவதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே உள்ள கட்டடங்கள் மூலம் சில லட்சங்கள் மட்டுமே வருமானம் வருகிறது.
கோயிலுக்கு சொந்தமான கட்டடங்களில் குடியிருப்போர், வியாபாரம் செய்வோரிடம் கோயில் நிர்வாகம் முறையாக கட்டணம் வசூலிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. வாடகை நிர்ணயம் செய்யப்படாமல் இருப்பதால் வியாபாரிகள், பொதுமக்கள் செலுத்தும் பணம் பழைய பாக்கிக்கு வரவு என கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வாடகை பாக்கி எவ்வளவு என்று கூறி அவகாசம் கொடுத்தால் பெரும்பான்மையானவர்கள் தொகையை செலுத்த தயாராக இருக்கின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதுவரை சுமார் 11 கோடி ரூபாய் வரை வாடகை பாக்கி இருக்கும் என நம்பப்படுகிறது. இப்பிரச்னையால் சன்னதி பஜாரில் குடிநீர் இணைப்பு பெற முடியவில்லை. கட்டடங்களை புதுப்பிக்க வழியில்லை. பழைய கட்டடங்கள் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனே வியாபாரிகள், பொதுமக்கள் சன்னதி பஜாரில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் கட்டண பாக்கியை செலுத்தாமல் கோயில் நிர்வாகத்தை ஏமாற்றி வருகின்றனர். இதனால் பெரும்பான்மையோர் மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளனர். இப்பிரச்னையில் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு வாடகை பாக்கி தொகையை விரைந்து வசூல் செய்யவும், புதிய வாடகையை நிர்ணயம் செய்யவும், கட்டடங்கள் புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது. குற்றாலநாதர் கோயிலுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டு வருவது இயற்கை அன்னைக்கே பொறுக்கவில்லை. அதனால்தான் குற்றால சீசன் களையிழந்து வருகிறது... என சிவனடியார்கள் கூறுகின்றனர்.