பதிவு செய்த நாள்
12
மார்
2022
02:03
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில், தேர் திருவிழா நிறைவடைந்ததை அடுத்து, தேரை சுத்தம் செய்து, பாதுகாப்பு கவசம் அணிவிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் மாசிமகத் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 17ம் தேதி தேரோட்டம் நடந்தது. தேர் நான்கு ரத வீதிகள் வழியாக வரும்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், தேர் மீது வாழைப்பழங்களை வீசி, வேண்டுதல் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் தேர் மீது சுற்றிலும் நடந்து செல்லும் பகுதி முழுவதும், வாழைப்பழங்கள் நிறைந்திருந்தது. பக்தர்கள் பழத்தை வீசிய வேகத்தில், பழம் சேதமடைந்து வெய்யிலில் காய்ந்தது. தேர் திருவிழா முடிந்த பின்பு, தேரை சுத்தம் செய்து, அதற்கு பாதுகாப்பு கவசம் போடுவது வழக்கம். தேர் அலங்காரம் கடந்த, 2ம் தேதி பிரிக்கப்பட்டது. அதன் பின்பு தேரை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணிகள் நேற்று நடந்தன. இதுகுறித்து கோவில் அலுவலர்கள் கூறுகையில், தேர்த்திருவிழா முடிந்த பின்பு, தேர் மீது உள்ள பழங்கள் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி கழுவி, நன்கு காய வைப்பது வழக்கம். அதன்பிறகு தேரைச் சுற்றி இரும்பு தகரத்தால் பாதுகாப்பு கவசம் போடப்படும். அதற்கான பணிகள் நடைபெறுகின்றன, என்றனர்.