பதிவு செய்த நாள்
17
ஜூலை
2012
11:07
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் 37ம் ஆண்டு கபிலர் விழா நேற்று துவங்கியது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் 37ம் ஆண்டு கபிலர் விழா நேற்று சுப்ரமணிய மகாலில் துவங்கியது. காலை 8 மணிக்கு கபிலர் குன்று வழிபாடும், 9 மணிக்கு சென்னை தமிழ் இசைச் சங்க இசைக் கல்லூரி நாகசுர, தவில் துறை விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் மங்கள இசையும் நடந்தது. விழாவிற்கு ஜீயர் சீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார். பகல் 11 மணிக்கு தெய்வத் திருப்பாடல்கள் இசை அரங்கம் நடந்தது. மாலை 4 மணிக்கு நாதஸ்வர இசை, 5.30 மணிக்கு திருமுறை இசை அரங்கம், சென்னை தமிழ் இசைக் கல்லூரி பரத நாட்டியத்துறை மாணவர்களின் நாட்டிய அரங்கம் நடந்தது.
விருது வழங்கல்: இன்று காலை 8.30 மணிக்கு டி.வி.சிகாமணி, சண்முகம் குழுவினரின் மங்கல இசையும், 9.50 மணிக்கு மயிலம் சிவசுப்ரமணியன் தலைமையில் நடக்கும் இலக்கிய விழாவில் "ஆசை அறுமின்கள் தலைப்பில் தியாகராஜன், "வான்முகில் வழாது பெய்க தலைப்பில் புரிசை நடராசன், "நாள் என்செய்யும் தலைப்பில் சுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர். மாலை 5 மணிக்கு நடக்கும் விருது வழங்கும் விழாவிற்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கி, முனைவர் ஞானசுந்தரத்திற்கு கபிலர் விருதும், கபிலவாணர் பட்டத்தையும் வழங்கி சிறப்பிக்கிறார். தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் சிறப்புரையாற்றுகிறார். காயத்ரி வெங்கட்ராகவனின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.