பதிவு செய்த நாள்
17
ஜூலை
2012
11:07
கும்பகோணம்: அம்மன்குடி லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள அம்மன்குடியில் லட்சுமிநாராயண பெருமாள்கோவில் உள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் இவ்வாலயம் பல லட்சம் மதிப்பில் சீதாராம மாருதி அறக்கட்டளை மூலம் திருப்பணி செய்யப்பட்டது. பின் கடந்த 13ம் தேதி முதல்கால யாகபூஜை தொடங்கியது. தொடர்ந்து இரண்டு, மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை நான்காம் கால யாகபூஜை நடந்தது. தொடர்ந்து 9.25 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. பின் 9.50 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடந்தது. 10.05 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக செயலாளரும், தஞ்சை சட்டமன்ற உறுப்பினருமான எம். ரெங்கசாமி, திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் ஏ.வி.கே. அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் க.தவமணி, ராம.ராமநாதன், மாவட்ட கவுன்சிலர் மணலூர் க. சுந்தர்ராஜன், இந்து அறக்கட்டளை வாரிய ஆலோசனைக்குழு செயலாளர் ரமேஷ், சிங்கப்பூர் முக்கிய பிரமுகர்கள், அம்மன்குடி ஊராட்சி மன்ற தலைவர் பி.கலியமூர்த்தி, நிர்வாக அதிகாரி பெ. பொன்னழகு, வி.லெஷ்மிநாராயண பட்டாச்சாரியார், வி. சீனிவாச பட்டாச்சாரியார், எல். ராஜலெஷ்மி, பி. புவனராகவ பட்டாச்சாரியார் மற்றும் சீதாராம மாருதி அறக்கட்டளையினர் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி திருநீலக்குடி போலீஸ் எஸ்.ஐ. நாகலெஷ்மி தலைமையில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி பெ.பொன்னழகு மற்றும் சீதாராம மாருதி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.