ஒரு கனிக்காக உலகத்தை முருகன் வலம் வந்ததாகவும், விநாயகர் அம்மையப்பரை வலம் வந்து அதை எளிதில் பெற்றதாகவும் வரலாறு. இதற்காக, முருகன் கோபித்துக் கொண்டு பழநி சென்று விட்டார் என்பது புராணக்கதை. ஆனால், இதில் ஆழமான தத்துவம் புதைந்து கிடைக்கிறது. சிவம் என்ற ஒன்றிலேயே எல்லாவற்றையும் கண்டார் விநாயகர். உலகமே அவருக்குள் அடக்கம் என்று அவரது பார்வையில் பட்டது. எல்லாவற்றிலும் சிவம் இருக்கிறது. எனவே, உலகம் முழுமையும் சுற்றி வர வேண்டும் என்பது முருகனின் எண்ணம். அதாவது, சிவத்துக்குள் எல்லாவற்றையும் காணலாம், எல்லாவற்றிலும் சிவனைக் காணலாம் என்ற அரிய தத்துவத்தை உணர்த்தவே அண்ணனும், தம்பியும் இத்தகைய விளையாடல் ஒன்றை நடத்திக் காட்டினர். பாலும் சுவையும் போல விநாயகரையும், முருகனையும் பிரிக்க முடியாது. எதிலும் சிவத்தைப் பார்ப்பவர்கள் ஞானமாகிய கனியைப் பெறலாம் என்பதை அவர்களின் உலக உலா எடுத்துச் சொல்கிறது.