படைப்புக்கு ஆதாரமான ஓம் மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மாவை சிறையில் இட்டார் முருகன். பிறகு, தானே படைப்புத்தொழிலைத் தொடங்கினார். அவரால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் எவ்வித பாவமும் இன்றி பிறந்ததால், எமதர்மன் தன் தொழிலை செய்ய அஞ்சினான். இதனடிப்படையில், முருகனை வழிபடும் பக்தர்களுக்கு விதியை வெல்லும் ஆற்றல் உண்டாகும். திருச்செந்துார் முருகனின் பன்னீர் இலை திருநீறும், அங்கே ஆதிசங்கரர் பாடிய சுப்பிரமணிய புஜங்கம் ஸ்தோத்திரமும் நோய் தீர்க்கும் வல்லமை பெற்றவை. இன்னும் எளிமையாக, “வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே! செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை” என்ற பாடலை தினமும் பக்தியுடன் பாடுபவர்கள், வாழ்வின் இறுதிவரை நோயின்றி வாழ்வதுடன், விதியையும் வெல்லும் ஆற்றல் அடைவர்.