இளமைக் காலத்தில் வாரியார் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தங்கியிருந்தார். அப்போது குருநாதரான தென்மடம் வரதாச்சாரியார் என்பவரிடம் வீணை கற்க அவரது தந்தை மல்லையதாசர் ஏற்பாடு செய்தார். மூன்று ஆண்டுக்குப் பின் வீணை கற்றுக் கொண்டது போதும்! உடனே ஊருக்கு வா என மகனுக்கு கடிதம் எழுதினார் மல்லையதாசர். குருநாதருக்கு காணிக்கையாக ஏதாவது தர விரும்புவதாக பதில் கடிதம் எழுதினார் வாரியார். தனக்கு அன்பளிப்பாக கிடைத்த இரண்டு எட்டு முழ வேட்டிகளை தந்தையும் அனுப்பி வைத்தார். வாரியாருக்கோ ஏதாவது நல்ல நினைவுப்பொருள் தர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. வாரியார் தங்கியிருந்த மாடி வீட்டின் எதிரில் முருகன் கோயில் இருந்தது. கோபுரத்தை நோக்கி, முருகா! ஞானபண்டிதா! குருநாதருக்கு காணிக்கை தர வழியில்லையே என கண்ணீர் விட்டார். அன்றே புரசைவாக்கத்தில் இருந்த பக்தர் ஒருவரின் வீட்டில் திடீரென சொற்பொழிவுக்கு அழைப்பு வந்தது. சன்மானமாக நாற்பது ரூபாய் கொடுத்தனர். புதையல் வந்தது போல துள்ளிக் குதித்து சைனா பஜாருக்கு ஓடினார் வாரியார். அப்போது பவுன் விலை பதின்மூன்று ரூபாய். இரண்டரை பவுனில் தங்கச் சங்கிலியும், அரைப்பவுன் பட்டாபிேஷக ராமர் டாலரும் வாங்கினார். மற்ற பொருட்களான பாதாம்பருப்பு, முந்திரி, திராட்சை, வாழைப்பழம், வெற்றிலைபாக்கு வாங்கினார். குருநாதரிடம் சென்று பழவகைகள், இரண்டு வேட்டிகள், தங்க நகைகளை தட்டில் வைத்து கொடுத்து, குருநாதா! ஏழை என்பதால் அதிகம் தர முடியவில்லை. அடியேனின் சிறு காணிக்கையை ஏற்று ஆசியளிக்க வேண்டும் என்று காலில் விழுந்தார். கண்ணீர் சிந்திய குருநாதர், நீ உத்தமமான பிள்ளை. உனக்கு தெய்வம் நிச்சயம் துணைபுரியும் என வாழ்த்தினார்.