பதிவு செய்த நாள்
19
மார்
2022
03:03
சித்தர் இலக்கிய ஆய்வாளர் பா.கமலக்கண்ணன்
சிவலிங்கம் போன்ற ஜோதியின் நடுவில் சுடர் எரிவது போன்ற அமைப்புடையது நம் உயிர் என்ற உண்மையை வேதங்கள் விளக்குகின்றன.
* சித்ரூபியான ஜீவனுக்கு இந்த லிங்கம் சூட்சுமமான சரீரமாகும் – ஆதிசங்கரரின் விவேக சூடாமணி
* எது சுயம்பிரகாசமானதோ, அணுவினும் சூட்சுமமானதோ, எதனிடம் உலகங்கள் நிலைபெறுகின்றனவோ, அதுவே அழிவில்லாத பிரம்மம் – அதர்வண வேதம், முண்டக உபடநிஷதம்
3. நம்மால் பார்க்க முடியாதவன், விவரிக்க முடியாதவன், கிரகிக்க முடியாதவன், அடையாளம் இல்லாதவன், நினைக்க முடியாதவன், குறிப்பிட்டுக் கூற முடியாதவன், ஒன்றே உயிர் என்ற அறிவால் அறியத்தக்கவன் – அதர்வண வேதம், மாண்டூக்ய உபநிஷதம்
சித்தர்கள் பரபிரம்மத்தின் சொரூபமான சிவலிங்க ஜோதியைக் கண்டு தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம்
மகாமேரு உச்சியிலே வளர்ந்த லிங்கம்
சத்தியும் ஆவுடையுமான லிங்கம்
சஞ்சார சமாதியிலே நிறைந்த லிங்கம்
புத்தியால் மனமொன்றாய்ப் புகழ்ந்த லிங்கம்
பூவரும் தன்னில் தான்முளைத்த லிங்கம்
எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம்
ஏகபரமான தொரு லிங்கம் தானே
– காகபுஜண்டர் சூத்திரம்
அந்த லிங்க சொரூபம் நெற்றியின் நடுவில் வளர்ந்தது, பிரம்மரந்திரத்தின் உச்சியில் இருப்பது, பீடமாக ஆவுடையும், நடுவில் சுடருமாக அமைந்தது, ஞானியின் சஞ்சார சமாதி என்ற நிலையில் சூக்கும சரீரம் தன்னுள்ளே ஐக்கியமடையப் பெற்றது, ஆறாவது அறிவாகிய சூக்கும சரீரத்தால் ஐம்புலன்களையும் ஒடுக்கி வைக்கும் பெருமையுடைய லிங்கம் அது. அந்த லிங்கம் தாமரை ஆசனத்தின் மீது அமர்ந்தது. எத்திசையும் புகழ்ந்திடும் ஏகபரம்பொருள் அந்த லிங்கமே.
2. நேரடா சிவலிங்க ரூபமாகி
நிறைந்த பராபரைதான் ஆவுடையுமாகி
– சுப்பிரமணியர் ஞானம்
3. கூரான ஞானியென்றால் லிங்கம் புக்குக்
குறியான அம்பலத்தில் சேர்வானப்பா
– சட்டை முனிவர் முன்ஞானம்
4. ஆதிமகா லிங்கம் கண்டு – அதில்
ஐம்புலன் ஒடுங்கியே ஆனந்தம் கொண்டு
– கல்லுளிச்சித்தர் பாடல்
5. சீவன் சிவலிங்கமாகத் தெளிந்தவர் தம்
பாவம் நசிக்கும் பரிந்து
– அவ்வைக்குறள்
6. தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
– திருமந்திரம்
அடுத்து சிவபெருமானால் உபதேசிக்கப் பெற்ற ரிபுமுனிவர் கூறும் சாட்சியவாவது
வேதமுதல் ஓதலினால் யாகம் தன்னால்
விரதமதால் இயமம் முதல் யோகத்தால்
சாதகமாம் தானத்தால் மற்றுமுள்ள
சகல வித கருமத்தால் பர சிவத்தைப்
பேதமுற அறிவம் எனும் இச்சை உண்டாய்
பின்னமிலாச் சிவவடிவாம் மகாலிங்கத்தை
தீதறவே அனவரதம் பூசிப் போர்க்கே
திடஞானம் உண்டாகி மோகம் தீரும்
– ரிபு கீதை
வேதம், உபநிஷதங்களை ஓதுவதாலும், யாகம் செய்வதாலும், விரதம், இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோகத்தாலும், தான தர்மம் செய்வதாலும் மற்றுமுள்ள சகலவித செயல்களாலும் பரப்பிரமத்தை அறிய வேண்டும் என்ற விருப்பம் உண்டாகும். ஆனால் பரிபூரணமான பரபிரமத்தின் வடிவமே உயிராக விளங்குகிறது என்ற உண்மையை உணர்ந்து விஞ்ஞானமய கோசத்திலுள்ள சிவலிங்க வடிவத்தை ஒருமனதாக நினைத்து தினமும் தவம் செய்தால் மட்டுமே மாயை விலகி முக்தி நிலை உண்டாகும்.
மேவிய தோர்நாத விந்து – வெகுவிகித
விற்பனை அறிய ஒரு கற்பனை சொல்வேன்
பாவிகள் இதை அறியார் – கல்லுகள் தனில்
பாவனை ஒப்பாகவுமே தாவிதம் செய்தார்
ஆவியென்றும் அறியாமல் – செலவழிய
ஆத்துமலிங்க மதனைப் பார்த்துணராமல்
– ஞான வெட்டியான்
உடலில் பொருந்தியுள்ள நாதம், விந்து என்னும் புனிதப் பொருள்களைப் பற்றிய அறிவு பூர்வமான விளக்கத்தை கூறுகிறேன். பாவிகள் இதை அறிய மாட்டார்கள். நம்முடைய பிரம்மரந்திரத்தின் உள்ளே விந்து என்னும் சூக்கும சரீரத்திற்கு மேலே நாதம் என்னும் பரப்பிரமமம் சொரூபமான நம்முடைய உயிர் சிவலிங்கம் போன்ற ஜோதியாக ஒளிர்கின்றது. இதை விளக்குவதற்காகவே கல்லில் வடித்துக் காட்டினார்கள். ஞானத்தவத்தால் ஆத்ம லிங்கத்தைப் பார்த்துணர முயற்சிக்காமல் கல்லையே வணங்கி காலம் கழிக்கின்றார்கள்.
இதே கருத்தையே திருக்குறள்,
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
சக்கரத்தின் நடுவே தீபம் எரிவதைப் போன்று தோற்றமுடையதாய் நம்முடைய பிரம்மரந்திரத்தினுள்ளே விளங்கும் உயிராகிய பரப்பிரமத்தின் திருவடியை ஞானத்தவத்தால் சேர்ந்தார்க்கல்லாது மற்றவர்களுக்குப் பிறவிக்கடலை நீந்த இயலாது.
அப்பர் பாடிய தேவாரம், திருக்களிற்றுப்படியார் என்னும் சைவ சாத்திரத்தில் இந்த உண்மை விளக்கப்பட்டுள்ளது.
காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக
வாய்மையே துாய்மையாக மனமணி லிங்கமாக
– தேவாரம்
தம்மில் சிவலிங்கம் கண்டு அதனைத்தாம் வணங்கி
– திருக்களிற்றுப்படியார்.