கேரளா, கோட்டயம் மாவட்டம் திரிக்கொடிதனம். இங்குள்ள அழகிய திருமால் கோயிலை உருவாக்கியவர் சகாதேவன். அர்ஜுனனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான பரீட்சித்துக்கு ஹஸ்தினாபுரத்தின் மகுடத்தை சூட்டி விட்டு பாண்டவர்கள் புண்ணியத் தலங்களுக்கு விஜயம் செய்ய கிளம்பினர். அப்போது பம்பை கரையை அடைந்ததும் ஆளுக்கு ஒரு கோயிலைக் கட்டினர். இதில் சகாதேவன் மேற்படி கோயிலை எழுப்பினார். இங்கு அருளும் திருமால் அற்புத நாராயணன் எனப்படுகிறார். அமிர்த நாராயணன் என்றும் சொல்வர். கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் ஆறடி உயரத்தில் இருக்கிறார். தாயார் பெயர் கற்பகவல்லி. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இதை நம்மாழ்வார் பாடியுள்ளார். இங்கு கண்ணன், நரசிம்மருக்கு சிலைகள் உள்ளன. கிருஷ்ணர் விஸ்வரூப வடிவில் காட்சி தருகிறார். இரண்டு அடுக்கு கொண்ட கோபுரம் இங்குள்ளது. நாலம்பலம் எனப்படும் செவ்வக வடிவ அரங்கம் ஒன்றும் உள்ளது. இத்துடன் கருவறையை இணைப்பது நமஸ்கார மண்டபம். இங்குள்ள துாண்களில் ராமாயண மகாபாரத நிகழ்ச்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு எதிரில் பூமி தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. குளத்துக்கும், கோயிலின் நுழைவாயிலுக்கும் நடுவில் ஒரு வித்தியாசமான சிலை உள்ளது. கல்துாண் ஒன்றின் மீது ஒரு மனிதனின் உருவம் காணப்படுகிறது. படுத்த நிலையில் இருக்கும் இந்த மனிதனின் இடுப்புப்பகுதி அந்த கல்துாண் மீதிருக்க உடலின் மீதிப் பகுதிகள் அந்தரத்தில் உள்ளன. இது குற்றம் இழைப்பவர்களுக்கான எச்சரிக்கை சிலை என நம்பப்படுகிறது. ஊழல்வாதிகள், நேர்மையற்றவர்கள் வாழ்வின் முடிவில் இந்த கதிக்கு ஆளாவர் என்பதை நினைவுபடுத்துகிறது இச்சிலை. இது தொடர்பாக இன்னொரு நிகழ்வும் கூறப்படுகிறது. ஒருமுறை இந்தப் பகுதியின் மன்னர் தரிசனத்திற்காக கோயிலுக்கு வந்தார். அப்போது பூஜை செய்யப்பட்டு நடை சாத்தப்பட்டு விட்டது. ஆனால் மன்னர் தனக்காக கோயில் நடையை திறக்கச் செய்தார். இதையறிந்த கோயில் அதிகாரிகள் கோபமடைந்து வாயிற்காப்போனின் தலையை வெட்டினர். மன்னனும் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இதை நினைவுபடுத்தியே அந்த சிலை இங்குள்ளதாக சொல்வர். திருவாங்கூர் தேவசம் வாரியம் இக்கோயிலை நிர்வகிக்கிறது.