பதிவு செய்த நாள்
19
மார்
2022
04:03
பரமக்குடி: பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் காமன் பண்டிகை விழா கோலாகலமாக நடந்தது. சிவபெருமானின் தவத்தை கலைக்க, மன்மதன் தனது மலரம்புகளை சிவன் மீது தொடுத்தார். இதனால் கோபமுற்ற சிவன், மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார்.பின்னர் ரதியின் வேண்டுகோளுக்கு இணங்க, பங்குனி உத்திரநாளில் மன்மதனை எழுப்பி அருள் புரிந்தார். இதனை நினைவு கூறும் வகையில், பரமக்குடி, எமனேஸ்வரம், ஜீவா நகர், சோமநாதபுரம், குமரக்குடி, வெங்கடேஸ்வரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் விழாக்கள் நடந்தது.இதனையொட்டி கடந்த 10 நாட்களாக காமனாக பாவித்து, ஆமணக்கு மரம் நடப்பட்டு, இரவு 10:00 மணிக்கு சிறப்பு பூஜைகள்நடத்தப்பட்டன. ரதி, மன்மதன் திருக்கல்யாணம் நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு ரதி, மன்மதன், சிவன், முருகன், விநாயகர் உள்ளிட்ட வேடமணிந்து, இரவு 11:00 மணிக்கு மேல் காமனை எரிக்கும் காமதகன விழா நடந்தது. பின்னர் நேற்று இரவு 9:00 மணிக்கு காமனை எழுப்பும் நிகழ்ச்சி நடந்து விழா நிறைவடைந்தது.