பதிவு செய்த நாள்
19
மார்
2022
05:03
மேட்டுப்பாளையம்: சிறுமுகை நாகம்மன் கோவிலுக்குள், கருநாகப்பாம்பு வந்ததை பார்த்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் அம்மன் சுவாமியை வழிபட்டனர்.
சிறுமுகையில் சுயம்பு வடிவமாய் நாகம்மன் கோவில் உள்ளது. இங்கு சுவாமி சிலை அருகே, புற்றும் உள்ளது. நேற்று பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, காலை கணபதி ஹோமம் பூஜை நடந்தது. பூஜை முடிந்தவுடன், கோவிலின் உள்ளே கருநாகப்பாம்பு திடீரென ஊர்ந்து வந்தது. இதைப் பார்த்த பூசாரி மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு பக்தி பரவசத்துடன் பக்தர்கள், அம்மன் சுவாமியையும், பாம்பையும் பார்த்து வழிபட்டனர். சிறிதுநேரம் சுவற்றின் ஓரத்தில் நெளிந்து அங்குமிங்கும் சென்ற பாம்பு, புற்றின் உள்ளே சென்று விட்டது. அதன் பிறகு வ.உ.சி நகர் ராஜகணபதி கோவிலில் இருந்து, நாகம்மன் கோவிலுக்கு பால்குடம், தீர்த்தக்குடம் ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை செய்யப்பட்டது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர், மகளிர் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.