மீனாட்சி கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு குத்தகை புதுப்பிக்காததால் கற்கள் கொண்டு வர சிக்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2022 05:03
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்துக்குள்ளான வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்க நாமக்கல் மாவட்ட கல்குவாரியில் கற்கள் எடுப்பதற்கான குத்தகையை புதுப்பிக்காததால் கற்கள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இக்கோயிலில் 2018 பிப்.,2ல் ஏற்பட்ட தீ விபத்தில் கலைநயமிக்க வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. இம்மண்டபத்தை சீரமைத்து அதோடு கோயில் கும்பாபிேஷகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மண்டப சீரமைப்புக்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டினம் கிராமத்தில் கற்களை வெட்டி எடுக்க கோயில் நிர்வாகம் அனுமதி பெற்று கல் குவாரியை குத்திகைக்கு எடுத்தது.கற்களை வெட்டி எடுக்கும் பணிக்காக ரூ.6.40 கோடியும், மண்டபத்தை வடிவமைக்க ரூ.11.70 கோடியும் ஒதுக்கப்பட்டது.
கடந்தாண்டு கற்கள் வெட்டி எடுக்கும் பணிகள் துவங்கின. சில டன் எடை கற்கள் கொண்டு வரப்பட்டு மதுரை செங்குளத்தில் உள்ள கோயில் இடத்தில் வைக்கப்பட்ட நிலையில், குத்தகை காலம் முடிவடைந்தது.இதற்கிடையே மண்டபம் சீரமைப்பு பணிக்கான ஸ்தபதியை முடிவு செய்ய அடுத்த வாரம் அதிகாரிகள் குழு கூடுகிறது. இறுதி செய்யப்படும் பட்சத்தில் உடனடியாக பணிகள் துவங்கப்படும். கற்கள் அடுத்தடுத்து கொண்டு வர வேண்டியிருக்கும். ஆனால் குத்தகை புதுப்பிக்காததால் கற்கள் எடுத்து வருவதில் தாமதமாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, கனிமவளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது. கலெக்டரின் ஒப்புதல் ஓரிரு நாளில் கிடைத்துவிடும் என்றனர்.