பாதயாத்திரை சென்ற தருமபுரம் ஆதீனத்திற்கு மூன்று மதத்தினர் வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2022 07:03
மயிலாடுதுறை: திருக்கடையூர் குருலிங்க சங்கம பாதயாத்திரை சென்ற தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானத்திற்கு நேற்று ஆக்கூரில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பூஜா மூர்த்தியாகிய சொக்கநாத பெருமானுடன் திருக்கூட்டத்து அடியவர்களுடன் குரு லிங்க சங்கம பாதயாத்திரையை நேற்று மாலை தொடங்கினார். மன்னம்பந்தல், ஆறுபாதி வழியாக விளநகர் துறைக்காட்டும் வள்ளலார் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார் தொடர்ந்து இரவு காளஹஸ்திநாதபுரம் அபிராமி பவனத்தில் சொக்கநாத பெருமானை எழுந்தருளச் செய்தார். இன்று காலை சொக்கநாத பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். இன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு திருக்கடையூர் நோக்கி சென்றபோது ஆக்கூர் பெரியபள்ளிவாசல் முன்பு இஸ்லாமிய ஜமாத்தார்கள் தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானதை, துவா ஓதி, சால்வை அணிவித்து வரவேற்றனர். குருமகா சன்னிதானத்துடன் வந்தவர்களுக்கு பள்ளிவாசல் நிர்வாக சபை சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து டிஇஎல்சி கிறிஸ்தவ சபை குருமார்கள் பிரார்த்தனை செய்து சொக்கநாத பெருமானுடன் சென்ற தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானத்திற்கு சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ஆக்கூர் தான்தோற்றீஸ்வரர் கோயில் வழிபாடு நடத்திய குருமகாசன்னிதானம் தெற்கு ஊராட்சி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது இரவு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சொக்கநாத பெருமானை எழுந்தருளச்செய்தார். இதில் திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதிதம்பிரான், சூரியனார்கோயில் ஆதீனம் 28வது குருமகா சன்னிதானம் மகாலிங்கதேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் உட்பட பலர் சென்றனர். பாதயாத்திரையின் போது தருமபுர ஆதீன பாடசாலை மாணவர்கள் தேவாரம் ஓவிய படியும் மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க முழங்கியபடி சென்றனர்.