பதிவு செய்த நாள்
21
மார்
2022
10:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4:30 மணிக்கு மகா கணபதி பூஜை, தேவதா அனுக்ஞை, புண்ணியாக வாஜனம், வாஸ்து சாந்தி முடிந்து காப்புக்கட்டுதல் நடந்தது. பின்னர் மாரியம்மன் கோவில் தெருவில் இருந்து கொடி பட்டம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலை வந்தடைந்தது. கோயிலில் கும்ப பூஜைகள், வேத பாராயணம் முடிந்த பின்னர் கொடிமரம் அபிஷேகம் செய்து காலை 9:30 மணிக்கு பூசாரி சுந்தர், கொடிப்பட்டம் ஏற்றி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் நகராட்சி தலைவர் தங்கம் ரவிகண்ணன், துணைத்தலைவர் செல்வமணி, முன்னாள் அறங்காவலர் ஆறுமுகம், டாக்டர் ராமநாதன், செயல் அலுவலர் கலாராணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். மார்ச் 31 அன்று மதியம் 1:00 மணிக்கு பூக்குழி இறங்குதல், ஏப்ரல் 1 அன்று மதியம் 12:05 மணிக்கு திருத்தேரோட்டமும் நடக்கிறது.