பதிவு செய்த நாள்
22
மார்
2022
12:03
பல்லடம்: சித்தம்பலத்தில் நடந்த ராகு கேது பெயர்ச்சி விழாவில், பக்தர்கள் பங்கேற்று தோஷ நிவர்த்தி செய்தனர். நவகிரகங்களில் ராகு கேது ஆகியோர், ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆவது வழக்கம். அவ்வாறு, நேற்று மதியம், 3.03 மணிக்கு, ரிஷபத்தில் இருந்த ராகு பகவான் மேஷ ராசிக்கும், விருச்சிகத்தில் இருந்த கேது பகவான் துலாம் ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர். இதை முன்னிட்டு, பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், லட்சார்ச்சனை, வேள்வி, மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காலை, 7.00மணிக்கு விநாயகர் பூஜை கணபதி பூஜையுடன் ராகு கேது பெயர்ச்சி விழா துவங்கியது. தொடர்ந்து, லட்சார்ச்சனை, 1,008 தீர்த்த கலச அபிஷேகம், சிறப்பு வேள்வி, ராகு கேதுக்கள் நீராட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் பங்கேற்று தோஷ நிவர்த்தி செய்து கொண்டனர். அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ராகு, கேதுக்கள் மற்றும் அம்மையப்பராக சிவபெருமானும் அருள்பாலித்தனர். அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.