பதிவு செய்த நாள்
23
மார்
2022
08:03
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறுவில் பூக்குண்டம் திருவிழா நடந்தது.
துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி இரண்டில் ராஜகணபதி, சித்தி விநாயகர், பண்ணாரி அம்மன் ஆகிய திருக்கோவில்களின் மூன்றாம் ஆண்டு குண்டம் திருவிழா நடந்தது. இங்கு கடந்த, 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பூச்சாட்டு, காப்புக்கட்டுதல், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், சிறியவர் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், சீர் கொண்டு வருதல், அம்மன் அழைத்தல், குண்டம் வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு திருக்கரகம், பால்குடம் மற்றும் பூச்சட்டி ஊர்வலம் ஊரை சுற்றி வந்து, கோவிலை அடைந்தது. பின்னர், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நடந்தது. முதலில் பூசாரி குண்டத்தில் இறங்கினார். அதையடுத்து கரகம் எடுத்தல், பால்குடம் எடுத்தல், பூச்சட்டி ஏந்தி வலம் வந்தவர்கள் குண்டத்தில் இறங்கினர். தொடர்ந்து, பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் குண்டம் இறங்கினர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்துக்கொண்டு பெண்கள் ஊர்வலமாக கோவிலை நோக்கி வந்தனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.