பதிவு செய்த நாள்
26
மார்
2022
08:03
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு துபாயில் இருந்து வந்த பக்தர், ஒரு கோடி ரூபாய் காணிக்கை செலுத்தி உள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, பக்தர்கள் வருகை போலவே காணிக்கையும் அதிகம்.துபாயில் பட்டய கணக்காளராக பணியாற்றும் எம்.ஹனுமந்த குமார், நேற்று திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்தார். பின் காணிக்கையாக ஒரு கோடி ரூபாய்க்கான வங்கி டி.டி.,யை தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டியிடம் வழங்கினார்.
ஏழைகளுக்கு சேவை செய்யும் தேவஸ்தான அறக்கட்டளைக்கு, இந்த காணிக்கையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, அவர் கேட்டுக்கொண்டார்.தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால், திருமலையில் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு தினசரி, 30 ஆயிரம் சர்வ தரிசன டோக்கன்கள், 25 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் விஐபி பிரேக் தரிசன பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, தினசரி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருவதால், தர்ம தரிசனத்தில் பக்தர்கள், இரண்டு மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.