குஜராத் மாநிலத்தில் துவாரகை கிருஷ்ணன் கோயில் கடலிலுள்ள ஒரு தீவில் இருக்கிறது. இந்த ஊர் கடலுக்குள் அமைய காரணம் உண்டு. அசுரனான கம்சனுக்கு பெண் கொடுத்த மாமனார் ஜராசந்தன், தன் மருமகனைக் கிருஷ்ணர் கொன்று விட்டார் என தெரிந்ததும், தன் படைகளை கிருஷ்ணர் தங்கியிருந்த மதுராவுக்கு அனுப்பினான். அவர்களால் கிருஷ்ணரைப் பிடிக்க முடியவில்லை. விடாக்கண்டனான ஜராசந்தன் பதினெட்டு முறை போர் தொடுத்தான். யாதவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களைப் பாதுகாப்பதற்காக மேற்குக்கடலில் இருந்த ஒரு தீவுக்கு கிருஷ்ணர் புறப்பட்டார். இந்த தீவில் ஒரு நகரத்தை உருவாக்கினார். அதுவே துவாரகை என பெயர் பெற்றது.